கழிவுநீர் கால்வாயில் மூழ்கிய சிறுமி... கத்திகூச்சலிட்ட பெண்கள்... காவலனாய் வந்த இளைஞர்... பரபரப்பான சிசிடிவி காட்சிகள்..!

0 2741

தேனியில் கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுமியை அந்த பகுதி இளைஞர் ஒருவர் உயிரோடு மீட்ட பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த ஆபத்பாந்தவனால் சிறுமி காப்பாற்றப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

தேனியில் கழிவு நீர் கால்வாயாகிப்போன ராஜவாய்க்காலில் மூழ்கிய சிறுமியை,தக்க நேரத்தில் குதித்து மீட்டு உயிரை காப்பாற்றிய காட்சிகள் தான் இவை ..!

தேனி மாவட்டம் தேனி பங்களா மேடு 32 வது வார்டில் வசித்து வரும் முத்து, மாரியம்மாள் தம்பதியரின் மகள் கீர்த்தனா.

வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி கீர்த்தனா, சுற்றுச்சுவர் உடைந்து திறந்த நிலையில் காணப்பட்ட ராஜா வாய்க்காலில் இறங்க முயன்றுள்ளார்

மூதாட்டி ஒருவர் சத்தமிட்டதால் அங்கிருந்து விலகிச்சென்ற சிறுமி பின்னர் ஓடி வந்து அந்த வாய்க்காலில் இறங்கியதால் அடுத்த சில வினாடிகளில் தத்தளித்து மூழ்க தொடங்கினார்

இதனை கண்டு பதறிப்போன இரு மூதாட்டிகள் சிறுமி விழுந்ததை கண்டு கூச்சலிட்டபடி உதவி கோரினர்

பெண்கள் எல்லாம் கத்தி கூச்சலிட்டபடி இருக்க அங்கு வந்த இளைஞர் ஒருவர் அந்த சாக்கடைக்குள் இறங்கி மூழ்கிய சிறுமியை தூக்கி கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றினார்

குழந்தையை கவனிக்காமல் மெத்தனமாக வீட்டுக்குள் இருந்த தாயை அங்கிருந்தவர்கள் அடிப்பது போல எச்சரித்தனர்.

மீட்கப்பட்ட குழந்தை கழிவுநீரை குடித்திருப்பதால் தேனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ராஜவாய்க்காலில் அப்பகுதி மக்கள் மீன்பிடித்தும், குளித்தும் சென்ற நிலையில் பெருகி வரும் மக்கள் தொகை ஆக்கிரமிப்பு குடியிருப்புகளால், கழிவு நீர் வாய்க்காலாக மாறிப்போனதாக கூறப்படுகின்றது.

தடுப்புச்சுவர் இடிந்து பல மாதங்கள் ஆகியும் அதனை சீரமைக்க தவறிய தேனி நகராட்சியின் அலட்சியப் போக்கால் சிறுமி கால்வாயில் இறங்கிய விபரீதம் அரங்கேறியதாக குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், தக்க நேரத்தில் அந்த இளைஞர் காப்பாற்றி இருக்காவிட்டால் சிறுமி உயிரிழந்திருப்பார் என்றும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments