விபத்தில் உயிருக்கு போராடிய மாணவியை அனாதையாக விட்டுச்சென்ற காதலன்..! மகளை பிரிந்து தாய் கதறல்

0 3443

காதலனுடன் பைக்கில் சென்ற பள்ளி மாணவி தவறி விழுந்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் , மாணவியை காதலன் அம்போவென விட்டுச்சென்றதால் அவர் பரிதாபமாக பலியானார். இன்ஸ்டா காதல் வில்லனால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளோடு பந்தாவாக போஸ் கொடுக்கும் இவர் தான் உயிருக்கு போராடிய மாணவியை அம்போவென விட்டு வந்த இன்ஸ்டா வில்லன் விஜூ..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் விஜு. தந்தை கொத்தனார் வேலை பார்த்து வர டிப்டாப் உடை அணிந்து ஓசி மோட்டார் சைக்கிளில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்ட 19 வயதான விஜூ மீது இரண்டு கஞ்சா வழக்குகள் உள்ளன. இன்ஸ்டா ரீல்ஸ்கள் மூலமாக 12ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலில் வீழ்த்திய விஜூ, அவருடன் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகின்றது

கணவர் இறந்த நிலையிலும், காய்கறி கடையில் கூலி வேலைப்பார்த்து தன் மகளை படிக்க வைத்த அந்த மாணவியின் தாய், இளைஞர் விஜூவை கண்டித்ததோடு போலீசில் புகார் அளித்துவிடுவேன் என்று எச்சரித்துள்ளார். சில நாட்களுக்கு மாணவியை சந்திக்காமல் விலகி இருந்த விஜூ , ஆசிட் வீசி விடுவதாக மிரட்டி மீண்டும் மாணவியை தன்னிடம் பேச வைத்ததாக சொல்லப்படுகின்றது

தேர்வு முடிந்த நிலையில், மகளை நர்சிங் படிக்க வைக்க முடிவெடுத்த மாணவியின் தாய், தனது சகோதரர் மூலமாக பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரிக்கும் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், தனது தோழியை பார்த்து விட்டு புத்தகம் வாங்கி வருவதாக கூறிச் சென்ற மாணவியை வழிமறித்து மிரட்டிய, விஜூ கட்டாயப்படுத்தி பைக்கில் ஏற்றிச்சென்றதாக கூறப்படுகின்றது. வளைவில் அதிவேகமாக சென்ற போது குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில் , விபத்தில் சிக்கி மாணவி உயிருக்கு போராடிய நிலையில் , அம்போவென விட்டுச்சென்ற விஜூ , போலீசுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

அந்த கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்தும் மேலாக சாலையில் அனாதையாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த மாணவியை மீட்டு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார். தனது மகளுக்கு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாததால், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மகளை கொண்டு சேர்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

இதையடுத்து விஜுவிடம் நடத்திய விசாரணையில் அதிவேகத்தில் சென்ற பைக் சிறிய பள்ளத்தில் ஏறி இறங்கியதால், பின்னால் அமர்ந்திருந்த மாணவி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததாகவும், சாலையோர தடுப்புக் கம்பியில் அவர் மோதி தலையில் காயமடைந்ததாக தெரிவித்த விஜூ, கஞ்சா போதையில் இருந்ததால் மாணவியை அப்படியே அம்போவென விட்டு சென்றதும் தெரிய வந்தது.

மாணவியை பைக்கில் கடத்திச் சென்றதாக போக்சா சட்டத்தின் கீழும், அஜாக்கிரதையாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகவும் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இன்ஸ்டா பழக்கத்தால் , போதை ஆசாமியின் காதல் வலையில் சிக்கியதால் பலியானது மாணவி மட்டுமல்ல, அவர் மீது ஒரு ஏழைத்தாய் வைத்திருந்த கனவும் தான்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments