40 ஆண்டு திரைப்பயணம்.. மறைந்தார் மனோபாலா..!

0 5175

தமிழ் திரை உலகின் இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 69.... 150க்கும் மேற்பட்ட படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தவர், திரை உலகினரை கலங்கவிட்டுச்சென்ற சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

புதிய வார்ப்புகள் படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு , உதவியாளராக தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்தவர் மனோபாலா என்கிற பாலசந்தர்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மருங்கூரை பூர்வீகமாக கொண்ட பாலசந்தர், ஆகாய கங்கை படத்தின் மூலம் மனோபாலா என்ற புதிய பெயரில் இயக்குனராக அறிமுகம் ஆனார். மோகன் - ராதிகா நடிப்பில் வெளியான பிள்ளை நிலா அவரை வெற்றிப்பட இயக்குனராக்கியது..

விஜயகாந்துக்காக அவர் இயக்கிய சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் படங்கள் மனோ பாலாவை பிஸியான இயக்குனராக்கியது

தமிழில் வெற்றி பெற்ற என் புருஷன் தான் எனக்கும் மட்டும் தான் படத்தை இந்தியில் Mera Pati Sirf Mera Hai என்ற பெயரில் இயக்கிய மனோபாலா, அந்தப்படத்தில் நாயகியாக ராதிகாவை நடிக்க வைத்தார்

ரஜினிகாந்துக்காக 1987 ஆம் ஆண்டு இயக்கிய ஊர்க்காவலன் படத்தில் மாஸான சண்டைக்காட்சிகளுடன், நகைச்சுவை காட்சிகளையும் வைத்திருந்தார் இயக்குனர் மனோ பாலா

தனது படங்களுக்கு இளையராஜா எப்போதுமே இனிமையான பாடல்களை கொடுத்ததாக மனோ பாலா பெருமிதம் தெரிவித்ததுண்டு

சிவாஜி கணேசனுடன் பாரம்பரியம் , சத்யராஜை வைத்து மல்லு வேட்டி மைனர் உள்ளிட்ட படங்களையும் மனோபாலா இயக்கி உள்ளார்

படங்களை இயக்கும் போதே இடை இடையே சிறு சிறுவேடங்களில் நடித்து வந்த மனோ பாலா, 2002ஆம் ஆண்டுக்கு பின்னர் நடிகர் விவேக் குழுவுடன் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கினார்

பல படங்களில் காமெடி வேடங்களில் தோன்றிய மனோபாலா, இயக்குனர் சுந்தர்.சி-யின் படங்களில் முக்கிய காமெடியனாக புகழ் பெற்றார்

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் பரிணமித்த மனோபாலா வின் கண்டுபிடிப்புத்தான் பிரபல இயக்குனர் எச்.வினோத்..!

சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் லியோ படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்று திரும்பிய மனோபாலா, இயக்குனர் கதிர் இயக்கத்தில் யோகிபாபுடன் ஒரு படத்தில் நடித்து வந்துள்ளார்.

அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் மனோபாலா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த 10 நாட்களாக வீட்டில் மருத்துவ ஓய்வில் இருந்த மனோபாலா இன்று காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்

தமிழ் திரை உலகில் எந்த ஒரு நடிகரோ தொழில் நுட்ப கலைஞர்களோ உயிரிழந்தால் முதல் ஆளாக மாலையுடன் சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்த மனோபாலவின் மறைவிற்கு தமிழ் திரை உலக பிரமுகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

திரை உலகில் 10 ஆண்டுகள் இயக்குனராகவும், 30 ஆண்டுகள் நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்த மனோபாலாவின் மறைவு, தமிழ் திரை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments