எஸ்.ஐ. மகளுக்கு கோவிலுக்குள் வைத்து தாலி கட்டிய இளைஞர்.. கதவை பூட்டிக் கொண்டு அடம்.. இப்படியும் சம்மதம் வாங்கலாமா ?
சப் இன்ஸ்பெக்டர் மகளை ராமர் கோவிலுக்குள் கூட்டிச்சென்று தாலி கட்டிய இளைஞர், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காதலியுடன் கோவில் கதவுகளை பூட்டிக் கொண்டு வெளியே மறுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது...
சினிமா பாணியில் கோவிலுக்குள் சென்று திருமணம் செய்து கொண்ட பின்னர் கோவிலை பூட்டிக் கொண்டு வெளியே வர மறுத்த கறார் காதல் ஜோடி இவர்கள் தான்..!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிப்பட்டினம் அருகே உள்ள புத்தாளபாளையம் கிராமத்தின் கிராம நிர்வாக செயலகத்தில் ஒன்றாக வேலைபார்த்து வந்த நாகராஜு, காயத்ரி இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும் காயத்ரியின் தந்தை காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்று வருவதாலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
காதல் திருமணம் செய்தால் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்துக்கு செல்வார்கள், இங்கே காவல் உதவி ஆய்வாளரின் பெண்ணையே காதலிப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய இரண்டு பேரும் புதிய முடிவெடுத்தனர். அதன்படி திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான மாலை,தாலி ஆகியவற்றுடன் செவ்வாய் கிழமை காலை புத்தாளபாளையம் கிராமத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சென்றனர்.
கோவிலுக்குள் புகுந்த இரண்டு பேரும் கோவிலின் கேட்டை இழுத்து மூடி உள்பக்கமாக பூட்டு போட்டனர். கோவிலின் சன்னநிதியில் மாலை மாற்றி தாலி கட்டி இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் ராமரிடம் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறிய அவர்கள், தங்கள் உயிருக்கு போலீசார் பாதுகாப்பு தந்தால் மட்டுமே கோவிலை விட்டு வெளியே வருவோம் என்று தெரிவித்து வெளியே வர மறுத்து அடம் பிடித்தனர்.
விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்து 2 பேரையும் வெளியில் வரவழைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இருவரது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், திருமணம் செய்து கொண்ட இருவரும் மேஜர் என்பதால் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று அறிவுரை கூறி மாப்பிள்ளையின் பெற்றோருடன் புதுமண ஜோடியை அனுப்பி வைத்தனர்.
Comments