அன்ன பூர்ணா ஓட்டல் மசாலா தோசைக்குள் கரப்பான் பூச்சி வந்தது எப்படி? அதிகாரிகள் சொன்ன அற்புத விளக்கம்..!

0 21267

கோவை அன்னபூர்ணா சைவ உணவகத்தில் மசால் தோசைக்குள் கரப்பான் பூச்சி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் உணவக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த நிலையில், உணவுப்பொருள் பாதுகாப்புத்துறையினர் மசாலா தோசையை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்...

கோவையில் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று அன்னபூர்ணா சைவ உணவகம். இங்கு உணவு பதார்த்தங்களின் சுவையும், விலையும் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சாய்பாபா காலனி என்.எல்.ஆர் சாலையில் உள்ள அன்னபூர்ணா ஓட்டலில் மசால் தோசை ஆர்டர் செய்த தம்பதிக்கு பரிமாறப்பட்ட தோசைக்குள் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது

ஆசையாக வாங்கிய மசாலா தோசையை பிய்த்து சாப்பிட முயன்ற போது மசாலாவுக்குள் இருந்து கரப்பான் வெளியே தெரிந்ததால் மிரண்டு போன வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

தாங்கள் வாங்கிய மசாலா தோசைக்குள் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடந்ததை வீடியோவாக எடுத்து மாவட்ட உணவு பொருள் பாதுகாப்புத்துறையினருக்கு புகாராக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்ற அதிகாரிகள் சமையல் அறையை சோதித்து இரண்டு வாரங்களுக்குள் பூச்சிகள் இல்லாத அளவுக்கு சரிசெய்ய எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும், ஆய்வுக்காக மசாலவின் மாதிரி எடுத்துச்சென்றதாகவும் உணவுபொருள் பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்செல்வன் தெரிவித்தார். தோசையில் இருந்த கரப்பான் வெந்து போனது மாதிரி இல்லை என்றும் எங்கிருந்தோ பறந்து வந்த கரப்பான் பூச்சி தோசையில் இருந்த மசாலாவில் விழுந்திருக்கலாம் என்றும் வினோத விளக்கம் அளித்தார்

அன்னபூர்னா உணவக நிர்வாகம் தரப்பில் கேட்ட போது, இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மேலாளர் விடுப்பில் சென்றிருப்பதாகவும், அவர் இரு தினங்கள் கழித்துதான் திரும்பி வருவார் என்றும் தெரிவித்தனர். கோவை மாவட்ட நிர்வாகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அன்ன பூர்ணா ஓட்டலில் இருந்து தான் அனைத்து விதமான உணவு பொருட்களும் கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments