5 திரையரங்குகளுக்கு சீல்.. பாதியில் நிறுத்தப்பட்ட பொன்னியின் செல்வன் -2..! வாரிசு - துணிவால் ஏற்பட்ட துன்பம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் 4 மாதங்களுக்கு முன்பு வாரிசு மற்றும் துணிவு படங்களை அனுமதியின்றி அதிகாலை சிறப்புக்காட்சி வெளியிட்ட 5 திரையரங்குகளை 3 நாட்கள் இழுத்து மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி மாதம் நடந்த விதி மீறலுக்கு மே மாதம் பொன்னியின் செல்வன் பாதியில் நிறுத்தப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப் பகுதியில் N S, விஸ்வநாத், கேசவன், பத்மாலயா. பிரியாலயா என மொத்தம் 5 திரையரங்குகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு முக்கியமான பொழுது போக்காக உள்ள இந்த திரையரங்குகளில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வாரிசு , துணிவு ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட்டன.
11 ந்தேதி அதிகாலை 4.00.மணிக்கு ரசிகர்களுக்காக கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு காட்சிகளும் திரையிடப்பட்டன. இந்த சிறப்பு காட்சிகள் அனுமதியின்றி திரையிடபட்டதால், இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் , இந்த 5 திரையரங்கு உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டார். சுமார் 4 மாத கால அவகாசம் வழங்கியும் மாவட்ட ஆட்சியருக்கு திரையரங்கு உரிமையாளர்கள் முறையான விளக்கம் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 5 திரையரங்குகளையும் அடுத்த மூன்று நாட்களுக்கு இழுத்து மூட மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த 5 திரையரங்குகளிலும் இன்று காலை காட்சியாக பொன்னியின் செல்வன் 2 , ருத்ரன் ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தது. வழக்கம் போல காலை 10:00 மணி காட்சிக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுத்து திரையரங்கில் அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஆத்தூர் வட்டாட்சியர் மாணிக்கம் தலைமையிலான வருவாய் துறையினர் திரையரங்கிற்கு வந்து உடனடியாக படத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டு திரையரங்கில் இருந்த ரசிகர்களை வெளியேற்றினர்.
படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு பணம் திரும்பக் கொடுக்கப்பட்டது, அனைவரும் பாதி படத்தில் ஏமாற்றத்துடன் எழுந்து வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆத்தூரில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஒரே நேரத்தில் மூடப்பட்டதால் தங்களின் வருமானம் பாதிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Comments