வரதட்சணை கொடுமை... கர்ப்பிணி தற்கொலை.... கொதித்தெழுந்த உறவினர்கள்... வீட்டின் முன் புதைக்கப்பட்ட சடலம்..!

0 2107

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது சடலத்தையும் அவர் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையின் சடலத்தையும் கணவன் வீட்டு முன்பே உறவினர்கள் பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள விலாப்பட்டி மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தனுக்கும் சவேரியார் பட்டினத்தைச் சேர்ந்த நாகேஸ்வரி என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

வரதட்சணையாக 15 சவரன் நகைகள் கொடுக்கப்பட்ட நிலையில், திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் இருந்தே கூடுதலாக நகை, பணம் கேட்டு, அரவிந்தனும் அவனது பெற்றோரும் நாகேஸ்வரியை துன்புறுத்தி வந்தனர் என்று கூறப்படுகிறது.

நாகேஸ்வரி கர்ப்பம் தரித்த பின்னரும் வரதட்சணைக் கொடுமை தொடர்ந்ததாகக் கூறப்படும் நிலையில், கோபித்துக் கொண்டு இரண்டு, மூன்று முறை நாகேஸ்வரி தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி காலை நாகேஸ்வரியின் குடும்பத்தினரை போனில் அழைத்த அரவிந்தன், நாகேஸ்வரி விஷமருந்தி விட்டதாகவும் அவரை கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளான்.

பதறியடித்துக் கொண்டு உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, நாகேஸ்வரி இறந்துவிட்டதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஆத்திரமடைந்த உறவினர்கள் அரவிந்தன், அவனது பெற்றோர் மீது அன்னவாசல் காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நாகேஸ்வரியின் உடலையும் அவரது வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட சிசுவின் உடலையும் உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டம் செய்தனர்.

கீரனூர் அருகே குளத்தூர் பிரிவு சாலையிலும் ஒரு பிரிவினர் மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தத்டைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

போலீசாரின் சமாதானத்தை ஏற்று உடல்களைப் பெற்றுக் கொண்ட நாகேஸ்வரியின் குடும்பத்தினர், இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.

ஆத்திரம் குறையாத உறவினர்கள், தாய், சேய் உடல்களை மேட்டுப்பாளையம் எடுத்துச் சென்று, போலீசார் தடுத்ததையும் மீறி அரவிந்தன் வீட்டு முன்பே பள்ளம் தோண்டி புதைத்தனர்.

இதனிடையே தலைமறைவாக இருந்த கணவன் அரவிந்தன், மாமனார் தங்கமணி, மாமியார் விஜயலட்சுமி ஆகியோரை அன்னவாசல் போலீசார் கைது செய்தனர்.

திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் வருவாய் கோட்டாட்சியரின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து முறையாக மயானத்தில் புதைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments