பார்ட் டைம் கேட்டரிங்.. ரச அண்டாவில் விழுந்த கல்லூரி மாணவன் பலி.. பந்தியில் மாணவன் வெந்த ரசம்..?
சென்னை அருகே, பாக்கெட் மணிக்காக பந்தி பரிமாறச் சென்ற கல்லூரி மாணவர், கொதிக்கும் ரச அண்டாவிற்குள் விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகர் பகுதியைச் சேர்ந்த வேணு-கவிதா தம்பதியரின் மூத்த மகன் தான் சதீஷ். 20 வயதான சதீஷ் கொருக்குப்பேட்டையில் உள்ள KCS கல்லூரியில் BCA மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
சதீஷ் படிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் தனது பாக்கெட் மணிக்காக, தச்சு வேலைப்பார்த்து வரும் தந்தைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதற்காக விடுமுறை நாட்களில் கிடைக்கும் சிறுசிறு வேலைகளுக்குச் செல்வது வழக்கமாம்.
அதன்படி, கடந்த 23ம் தேதி மீஞ்சூரில் திருமண மண்டபத்தில் நிகழ்ந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உணவு பரிமாறும் வேலைக்கு போகலாமா என நண்பர்கள் சதீஷை அழைத்துள்ளனர். வயிறு நிறைய சாப்பாடு, வயிறு நிரம்பிய பிறகு பாக்கெட் மணியும் கிடைக்கும் என்பதால் சதீஷ் நண்பர்களுடன் வேலைக்குச் சென்றார்.
அங்கு, உணவு பரிமாறுவதற்காக சமையலறைக்குச் சென்று சாம்பார் சாதம் வைத்திருந்த பாத்திரத்தை பின்புறமாக சதீஷ் இழுத்து வந்துள்ளார். அப்போது, பெரிய பாத்திரத்தில் மூடிக் கொண்டு மூடாமல் சூடாக இறக்கி வைக்கப்பட்டிருந்த ரசம் அண்டா தடுக்கி அதற்குள்ளேயே சதீஷ் விழுந்துள்ளார்.
அருகிலிருந்த சக நண்பர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, 5 நாட்கள் சிகிச்சையில் இருந்தும் சிகிச்சை பலனின்றி சதீஷ் உயிர் இழந்தார்.
சதீஷ் ரச அண்டாவிற்குள் விழுந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கக்கூட கேட்டரிங் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென சக நண்பர்கள் தெரிவித்தனர்.
சதீஷ் இறந்த நிலையில், அவர் விழுந்து உடல் பாகங்கள் வெந்த ரசத்தை பந்தியில் பரிமாறியதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்கள் என்றால் குறைந்த கூலி கொடுத்து அதிக லாபம் சம்பாதித்து விடலாம் என்ற வியாபார நோக்கத்திற்காக எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாத மாணவர்களை பயன்படுத்தும் கேட்டரிங் நிறுவனங்கள் மீதும் உரிய கண்காணிப்பு தேவைப்படுகிறது.
Comments