"மக்களின் உணர்வின் பிரதிபலிப்பே மனதின் குரல் நிகழ்ச்சி" 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் உரை..!

0 1239

மன் கி பாத்-ன் 100-வது அத்தியாய ஒலிபரப்பில் பேசிய பிரதமர் மோடி, 100 கோடி மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே மனதின் குரல் நிகழ்ச்சி என தெரிவித்துள்ளார். மக்களிடம் நேர்மறை சிந்தனைகளை மனதின் குரல் நிகழ்ச்சி கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தொடங்கப்பட்ட மனதின் குரல் நிகழ்ச்சி, இன்று 100-வது அத்தியாயத்தை எட்டியுள்ளது. மனதின் குரல் தனக்கு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல எனக்கூறிய பிரதமர், அது ஒரு நம்பிக்கை எனவும், மக்களுக்கு தனது காணிக்கை எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சி பிறரின் நல்ல பண்புகளை கொண்டாடவும், குணங்களை மற்றவர்களுக்கு கடத்தும் ஒரு கருவியாகவும் திகழ்வதாக தெரிவித்தார்.

தூய்மை இந்தியா இயக்கம் உட்பட எந்த பிரச்சனைகளை எல்லாம் மனதின் குரல் பேசியதோ, அவை அனைத்தும் மக்கள் இயக்கமாக உருப்பெற்றதாக சுட்டிக்காட்டினார். 

பெண்களின் பங்களிப்பு குறித்து தான் பலமுறை பேசியதாக கூறிய பிரதமர், தமிழகத்தின் பழங்குடியின பெண்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த சுடுமண் கோப்பைகளை ஏற்றுமதி செய்வது குறித்தும், வேலூரில் நாக நதியை 20 ஆயிரம் பெண்கள் மீட்டெடுத்தது குறித்து பேசியதையும் மிண்டும் நினைவுகூர்ந்தார்.

நாட்டில் பலர், எண்ணற்ற பல தியாகங்களை செய்துவருவதாகவும், அவற்றை பேசும்போது தான் உணர்ச்சி வயப்பட்டதாகவும் பிரதமர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.. டெல்லிக்கு சென்ற பிறகு பணிகள் வேறு விதமாக மாறியதாகவும், ஒரு வெறுமையை உணர்ந்ததாகவும் குறிப்பிட்ட பிரதமர், மனதின் குரல் அதற்கு ஒரு தீர்வாக வந்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ் உட்பட 22 இந்திய மொழிகள் மற்றும் பிரெஞ்சு, அரபிக் உட்பட 11 வெளிநாட்டு மொழிகளிலும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் உள்ள அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் 100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது. இதேபோல், நியூ ஜெர்சி, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றிலும் மனதின் குரல் நேரலையை இந்திய வம்சாவளியினருடன் அமைச்சர்கள் கேட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments