எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி..! கடலில் குதித்த கர்ப்பிணி..! மாமியாரை எதிர்த்து விபரீதம்

0 3324

மாமியாருடன் ஏற்பட்ட தகராறின் போது தனது கணவன், தாய்க்கு ஆதரவாக பேசியதால் விரக்தி அடைந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஸ்ரீகாகுளத்தில் அரங்கேறி உள்ளது...

மாமியார் கொடுமையை எதிர்த்து கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி பெண் சுவேதா இவர் தான்..!

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் மணிகண்டனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. மணிகண்டனின் தாய் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். மணிகண்டன் அலுவலக வேலையாக ஐதராபாத் புறப்பட்டுச் சென்ற நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த 5 மாத கர்ப்பிணியான சுவேதா மாயமானார்.

 வீடு பூட்டப்பட்டு கிடந்ததால் சந்தேகம் அடைந்த மாமியார் தனது மகனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் விசாகப்பட்டினம் கடற்கரையில் சுவேதா சடலமாக கரை ஒதுங்கினார். தகவல் அறிந்து சென்ற போலீசார் ஸ்வேதாவின் சடலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிணகூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.

வீட்டுச்சாவியை சுவேதா பக்கத்து வீட்டில் கொடுத்துச் சென்றிருப்பது தெரியவந்ததால் அந்த சாவியை வாங்கி வீட்டை திறந்த போலீசார் சுவேதாவின் அறையில் சோதனை செய்தனர். அப்போது ஸ்மைலி பொம்மையுடன் வெள்ளை பேப்பரில் 'எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி' என்று சுவேதா மணிகண்டனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் 'நான் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எனக்கு எப்போதோ தெரியும்....

உங்களுக்கு உண்மையான வலி இருக்காது.... உங்கள் எதிர்காலம், புதிய வாழ்க்கை ஆகியவற்றுக்கு ஆல் தி பெஸ்ட்...! என்று குறிப்பிடபட்டிருந்தது. மேலும் உங்களுடன் பேசுவதற்கு நிறைய இருந்தாலும்.. நான் எதுவும் பேசவில்லை. உனக்கு எல்லாம் தெரியும். உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மாமியார் மற்றும் கணவர் மணிகண்டனை பிடித்து போலீசார் விசாரித்த போது மாமியார் மருமகள் சண்டையால் எடுத்த விபரீத முடிவு வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவத்தன்று வழக்கம் போல மாமியார் மருமகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மருமகளை சத்தம் போட்டு விட்டு மாமியார் வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது, தனது கணவனிடம் செல்போனில் பேசிய சுவேதா அழுதுள்ளார்.

அப்போது அவரது கணவரும், தாயாருக்கு சாதகமாகவே பேசியதால் விரக்தி அடைந்த சுவேதா வீட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு விசாகப்பட்டினம் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்..

இதற்கிடையே திருமணத்தின்போது கொடுத்த 10 லட்சம் ரூபாய் வரதட்சணை போதவில்லை எனக்கூறி மாமியார் தொல்லை செய்து சண்டையிட்டதால் சுவேதா உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தாய் ரமா குற்றஞ்சாட்டி உள்ளார்..

திருமணமான ஒரே வருடத்தில் ஸ்வேதா உயிரிழந்துள்ளதால், காவல்துறையினர் மற்றும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments