ஸ்ரீபெரும்புதூருக்கு யார் தான் ராஜா.? போட்டியில் சரியும் தலைகள்... பிபிஜி சங்கரை தூக்கியது இந்த கும்பலாம்..!
ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரும்பு கழிவுகளை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டியில் பாஜக நிர்வாகி பிபிஜி சங்கர் நாட்டு வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை தொடர்பாக இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த சாந்தகுமார் தலைமையில் 9 பேர் கும்பல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்
சினிமா ஹீரோக்கள் போல பில்டப் செய்து கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியின் ராஜா என்று முடிசூட்டிக் கொண்டவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பிபிஜி சங்கர்..!
இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள பன்னாட்டு கம்பெனிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் சிலவற்றில் ஸ்கிராப் என்று சொல்லக்கூடிய இரும்பு கழிவுகளை எடுக்கும் ஒப்பந்தத்தை பிபிஜி சங்கர் கைப்பற்றி தன் வசம் வைத்திருந்தார்.
இதன் மூலம் பலகோடிகளை குவித்ததுடன் பாஜகவில் மாநில அளவிலான பொறுப்பை பெற்றதால், இவர் மீது பலருக்கு பகை உருவானதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே இவரால் கொலை செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் பிபிஜி சங்கரின் தலைக்கு குறிவைத்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவரை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு வீசி பயிற்சி எடுத்ததாக வளர்புரத்தை சேர்ந்த இளம் ரவுடி விஜய் உள்ளிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்திருந்தனர்.
அண்மையில் பிபிஜி சங்கருக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அதன் பின்னர் அரசியலில் சற்று அடக்கிவாசிக்க தொடங்கினார் பிபிஜி சங்கர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு தனது காரில் சென்னையில் இருந்து வளர்புரம் நோக்கிச்சென்று கொண்டிருந்த பிபிஜி சங்கரை நசரத்பேட்டை சிக்னலில் வழிமறித்த மர்மக்கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய பிபிஜி சங்கரை விடாமல் விரட்டிச்சென்ற கும்பல், அவர் கையில் கத்தி இருந்த போதும் அவரை சுதாரிக்கவிடாமல் வெட்டிக் கொன்றதாக சொல்லப்படுகிறது.
படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 7 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடிவந்தனர்.
இந்த கொலையில் போலீசார் தங்களை தேடுவதாக கூறி சாந்தகுமார், உதயகுமார், சரத்குமார்,சஞ்சீவ், குணா, ஆனந்த், தினேஷ், ஜெகன் உள்ளிட்ட 9 பேர் எழும்பூர் 13ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த சாந்தகுமார் மற்றும் உதயகுமார் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள நிறுவனங்களில் இரும்புகழிவுகளை கைப்பற்றுவதில் தங்களது செல்வாக்கை நிலை நிறுத்த பிபிஜி சங்கரை தீர்த்து கட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இதேபோல கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிபிஜி குமரன் காரில் சென்ற போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் சிலரை தீர்த்துக்கட்டி பிபிஜி சங்கர் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வந்தார். தற்போது வேறு ஒரு கும்பல் இந்த இடத்தை பிடிக்க களமிறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
எனவே, மற்றுமொரு சம்பவம் நடைபெறும் முன், காவல்துறையினர் உறுதியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு ரவுடிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments