இது தாண்டா போலீஸ்.. வீச்சரிவாள் மோதலை தனி ஒருவனாக தடுத்த ஏட்டு.. அடங்காத பஞ்சாயத்து.. அடங்கிய சம்பவம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ராவுத்த நல்லூரில் இருபக்கமும் பயங்கர ஆயுதங்களுடன் மோதலுக்கு தயாராக நின்றவர்களை, தனி ஒரு ஆளாக நின்று தலைமைக் காவலர் ஒருவர், பெரும் மோதலை தடுத்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராவுத்தநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்தும் திருவிழாவில் ஊர்மக்கள் வரிசையாக நின்று தங்கள் வீடுகளில் காய்ச்சப்பட்ட கூழை பாத்திரத்தில் எடுத்து வந்து அம்மனுக்கு ஊற்றிச்சென்றனர்.
அப்போது திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சரண்யாவின் கணவர் கதிரவன் வரிசையில் நிற்காமல் கூழ் ஊற்ற முயன்றதால், அதிமுகவை சேர்ந்த மாயவனுடன் ஏற்பட்ட தகராறில் கையில் வீச்சரிவாளை எடுத்துக் கொண்டு, கூட்டாளிகளையும் அழைத்து வந்த கதிரவன் கும்பல் தாக்கியதில் மாயவன் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மாயவன் தரப்பினர் கையில் கட்டைகளுடன் கதிரவனின் கும்பலை அடிக்கத் திரண்டனர், மறுபக்கம் கையில் வீச்சரிவாள், இரும்புக் கம்பிகளுடன் கதிரவன் தரப்பினர் நின்று கொண்டிருந்தனர்
அந்த இடத்தில் பெரும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது ஆனால் பாதுகாப்புக்கு என்று தலைமைக் காவலர் பழனிமுத்து மட்டுமே இருந்தார். நிலவரத்தை செல்போனில் வீடியோ எடுத்தபடி இரு தரப்பையும் சமாளித்து தடுத்துக் கொண்டு நின்றார்.
கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருக்கும் கதிரவன் கும்பலை அடக்கச்சொல்லி எதிர் தரப்பினர் குரல் கொடுத்தனர்
முண்டிக்கொண்டு தாக்குதலுக்கு வந்த மக்களை சமாதானப்படுத்தியும் , அதட்டியும் முன்னேற விடாமல் தடுத்தார் ஏட்டு பழனி முத்து.
ஊராட்சி தலைவரின் ஆதரவாளர்களை கையால் தட்டி விரட்டி விட்டார்.
எப்போது வேண்டுமானாலும் கலவரம் ஏற்படலாம் என்ற நிலையில் காவல்துறைக்கு உள்ள கம்பீரத்துடன் தனி ஒருவனாக நின்று இரு தரப்பையும் அங்கிருந்து விரட்டிக் கொண்டிருந்தார்.
தாமதமாக சம்பவ இடத்துக்கு வந்த மற்ற போலீசார் மொத்தக்கூட்டத்தையும் அங்கிருந்து விரட்டிய நிலையில் அதிமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் வீச்சரிவாளுடன் சுற்றிய கதிரவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கலவரத்தை தடுக்க போலீஸ் படையோ... துப்பாக்கிச்சூடோ... தேவையில்லை, சமூக அக்கறையும் , தைரியமும் உள்ள ஒற்றை போலீஸ்காரன் போதுமென்பதற்கு இந்தச்சம்பவமே சாட்சி..!
Comments