அவரு டாக்டர் இல்லீங்க... எங்களுக்கெல்லாம் ‘தெய்வம்’ ஊரே கையெடுத்து கும்பிடுதுப்பா..!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஹோமியோபதி மருத்துவர் பாபுவை போலி டாக்டர் என்று போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்ற நிலையில் ஏராளமான கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவரை மீட்டு வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கராம்பட்டி கிராமத்தில் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வருபவர் பாபு. 62 வயதான இவர் 40 ஆண்டுகளாக 9 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மருத்துவம் பார்த்து கைராசி மருத்துவர் என்று மக்களிடம் பெயரெடுத்துள்ளார்
இந்த நிலையில் புதன்கிழமை பாபுவை போலி மருத்துவர் என காவல்துறையினர் விசாரணைக்காக ஆண்டிபட்டி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இதனை அறிந்த ரெங்கராம்பட்டி, ஏத்தகோவில், சித்தகவுண்டம்பட்டி, மேக்கலாம்பட்டி, அனுப்பப்பட்டி ,போடிதாசன்பட்டி, மறவபட்டி, மணியகாரன்பட்டி ,பாலக்கோம்பை ஆகிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆண்டிபட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
எட்டு கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு கடந்த 40 ஆண்டு காலமாக கொடுத்த காசுக்கு இவர் சிறப்பாக மருத்துவம் பார்த்து வருவதாக தெரிவித்த அவர்கள், மக்கள் மருத்துவர் பாபுவை விடுவிக்க கோரிக்கை விடுத்தனர்
ஆண்டிபட்டியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றால் சாதாரண காய்ச்சலுக்கு மட்டும் 500 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை செலவாகிறது, நோயும் குணமாவதில்லை ஆனால் மருத்துவர் பாபு கொடுக்கும் அனைத்து மருந்துகளும் உடனடியாக நோயை குணப்படுத்துவதாக தெரிவித்தனர்
ஒரு நாள் நள்ளிரவு பேரனுக்கு நெஞ்சடைப்பு என மருத்துவர் பாபுவிடம் கொண்டு சென்றேன் குழந்தையை காப்பாற்றி கொடுத்தார் அவர் மருத்துவர் இல்லைங்க எனக்கு கடவுள் என்று கிராம வாசிகள் அவருக்கு ஆதரவாக நின்றனர்
இதை தொடர்ந்து காவல் துறையினர் , மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மருத்துவர் பாபுவிடம் ஆங்கில மருத்துவர் பார்க்க கூடாது என்று எச்சரித்து, மக்களுடன் அனுப்பி வைத்தனர். இதையடுத்து கூடியிருந்த மருத்துவர் மீது மரியாதை கொண்ட மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்
Comments