இந்தியன் வங்கியில் இருந்து 44 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற வங்கி காசாளர் கைது!
விழுப்புரம் அருகே இந்தியன் வங்கியில் இருந்து 44 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற வங்கி காசாளர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையில் காசாளராக பணியாற்றி வந்த முகேஷ், வங்கியில் இருந்த 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை பையில் எடுத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறி தப்பினார்.
இதுகுறித்து, வங்கி மேலாளர் பிரியதர்ஷினி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தனிப்படை அமைத்து, போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில்,நேற்று மாலை முகேஷ் தம்முடைய நண்பர் அருணுக்கு தொடர்பு கொண்டு, அவரது வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார்.
இதுபற்றி அறிந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு சென்ற போலீசார், முகேஷை கைது செய்து, அவரிடம் இருந்த பணத்தை மீட்டனர்.
Comments