அரசு மருத்துவமனை லிப்ட்டுக்குள் சிக்கிய பெண்கள் மீட்கப்பட்ட காட்சி..! பாதியில் நின்றதால் தவிப்பு
தென்காசி அரசு மருத்துவமனையில் நான்கு பெண்கள் லிப்டில் சிக்கி தவித்த நிலையில் தீயணைப்பு துறையினர் ஒன்றரை மணி நேரம் போராடி மீட்டனர். உறவினரை சிகிச்சைக்கு சேர்க்க வந்த இடத்தில் லிப்டில் சிக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
தினமும் ஆயிரக்கணகான நோயாளிகள் சிகிச்சைக்காக உறவினர்களுடன் வந்து செல்லும் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் லிப்ட்டு பழுதானதால் பெண்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சங்கரன் கோவிலில் இருந்து செல்வி என்பவர், தனது உறவினரை சிகிச்சைக்காக இந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, உடன் வந்த தட்டாம்பாறை வள்ளியம்மாள், கற்குடி சுடலை மாடத்தி, வி கே புதூர் முத்துலட்சுமி ஆகியோருடன் 3 வது மாடியில் இருந்து தரை தளத்திற்கு லிப்டில் வந்துள்ளனர்.
சுமார் 11 மணியளவில் லிப்டில் ஏரிய நிலையில் முதல் தளத்துக்கு வராமல் நடுவில் லிப்ட்டு நின்று விட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் 4 பேரும் தவித்துப்போயினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் லிப்டின் கதவை திறக்கபோராடினர். அந்த லிப்ட்டின் கதவுகள் பழைய மாடல் என்பதால் அதனை திறப்பது தீயணைப்புத்துறையினருக்கு சவாலாக இருந்தது.
இறுதியில் லிப்ட்டின் கதவுகளை திறந்து பார்த்த போது தரை தளத்திற்கு வராமல் பாதியின் நின்ற லிப்ட்டில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த 4 பெண்களையும் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர்.
மீட்கப்பட்ட 4 பேரில் இருவர் மூதாட்டிகள் என்பதால் லிப்ட்டுக்குள் போதிய காற்று வசதி இன்றி திக்கு முக்காடி போனதாக கூறப்படுகின்றது. தக்க தருணத்தில் மீட்டதால் தாங்கள் உயிர் பிழைத்ததாக மீட்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தீயணைப்புத்துறையினரை கையெடுத்து கும்பிட்டார். மீட்கப்பட்ட 4 பெண்களுக்கும் உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
உறவினரை சிகிச்சைக்கு சேர்க்க வந்த இடத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள பழுதான லிப்ட்டில் சிக்கிக் கொண்டதால் இருவர் நோயாளியான சம்பவம் அரங்கேறி உள்ளதாகவும், இதே போல நோயாளி யாராவது லிப்ட்டிற்குள் சிக்கி இருந்தால் உயிர் பிழைப்பது கடினமாயிருக்கும் என்று குற்றஞ்சாட்டி உள்ள உறவினர்கள் , நோயாளிகளின் நலன் கருதி லிப்ட்டுகளை சரிவர பராமரிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
Comments