மணல் கடத்தல் குறித்து போலீசில் புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலர் படுகொலை..! போட்டுக் கொடுத்த கருப்பு ஆடுகள்

0 5347

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணல் கடத்தல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலரை, அவரது அலுவலகத்திற்குள் புகுந்து மணல் கடத்தல் ஆசாமிகள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ் . வழக்கம் போல இன்று பணிக்கு வந்த லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென உள்ளே புகுந்த இருவர், அரிவாளால் வி.ஏ.ஓ.வை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தலை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை உடனடியாக தூக்கிச்சென்று காப்பாற்ற முயலாமல், அங்கு வந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஆம்புலன்ஸில் ஏற்றி லூர்து பிரான்ஸிசை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக பலியானார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இரு சக்கர வாகனங்களில் ஆற்று மணல் கடத்தும் நபர்கள் குறித்த பெயர் விவரங்களை அங்குள்ள காவல் நிலையத்தில் லூர்து பிரான்ஸிஸ் புகாராக எழுதிக் கொடுத்துள்ளார். மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய காவல்துறையினரோ அதனை விடுத்து கடத்தல்காரர்களிடம் வி.ஏ.ஒ லூர்து பிரான்ஸிசை போட்டுக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, தங்கள் மீது போலீசில் புகார் அளித்த வி.ஏ.ஓ மீது ஆத்திரத்தில் இருந்த மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், காலையில் அலுவலகத்திற்கு புகுந்து இந்த படுபாதக கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ராம சுப்பிரமணியம் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உள்ளூர் காவல் நிலையங்களில் ரகசிய கூட்டு வைத்துக் கொண்டு, பல்வேறு இடங்களில் பரவலாக தங்குதடையின்றி ஆற்று மணல், தாது மணல், களி மண் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றது. இவற்றை தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய போலீசார் புகார் அளிப்பவர்களை கடத்தல் கும்பலிடம் போட்டுக் கொடுக்கும் வேலைகளை செய்து வருவதாக குற்றஞ்சாட்டும் சமூக ஆர்வலர்கள், இந்த சம்பவத்தில் மணல் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் மணல் கடத்தல் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ லூர்து பிரான்சின் மகளுக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் ஒரே ஆதரவாக இருந்த லூர்து பிரான்ஸிசை இழந்து குடும்பத்தினர் நிற்கதியாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வி.ஏ.ஓ லூர்து பிராண்ஸிஸ் உயிரிழப்பிற்கு இரங்கலையும் அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் ட் தெரிவித்துள்ள, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், லூர்து பிராண்ஸிஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments