சுற்றுலா வாகனத்துக்கு கூடுதல் கட்டணம் கேட்டதால் தகராறு- 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு படுகாயம்

0 9640

நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர், 20 ஆயிரம் ரூபாய் வாடகை பேசி வேன் ஒன்றில் தனது உறவினர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். ஏலக்குறிச்சி அடைக்கல மாதா கோவில்,பூண்டி மாதா கோவில் சென்றுவிட்டு இறுதியாக வேளாங்கண்ணி சென்றுள்ளனர்.

புதுவை மாநில எல்லைக்குட்பட்ட காரைக்கால் பகுதியை கடந்து செல்ல பர்மிட் வாங்க வேண்டும் எனக்கூறி கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் வேன் ஓட்டுநர் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஹரிஹரன் தரப்பு மறுக்கவே, ஓட்டுநர் தனது உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

விவகாரம் வேளாங்கண்ணி கார் ஓட்டுனர்கள் சங்கத்திடம் சென்றதையடுத்து, அவர்களில் சிலர் ஹரிஹரன் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஹரிஹரன் தரப்பினர் அவர்களை தாக்கியதாகச் சொல்லப்படும் நிலையில், தகவலறிந்து வந்த 20க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஹரிஹரன் தரப்பினரை தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments