சிங்கிள் மூதாட்டிகளே அம்பர்லா கொலையாளி வர்ரான் உஷார்... !

0 2808

சென்னையில் வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து வந்த அம்பர்லா கொலையாளியை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை, ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 12வது தெருவைச் சேர்ந்தவர் 81 வயதான மூதாட்டி சிவகாமசுந்தரி. கடந்த 22ம் தேதி இவரது மகன் ஸ்ரீராம் வேலைக்குச் சென்று விடவே வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அவரை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 15 சவரன் நகை மற்றும் வீட்டின் பீரோவை உடைத்து இரண்டரை லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.

கொலை குறித்து விசாரிக்க உதவி ஆணையர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சிசிடிவியில் முகம் பதியாதபடி வான்நீல நிறமுடைய குடையை பிடித்தபடி நபர் ஒருவர் மூதாட்டியின் வீட்டிற்குச் செல்வதும் பின்னர் திரும்பி வருவதையும் கண்டுபிடித்தனர். எங்கெங்கு சிசிடிவி உள்ளதோ அங்கெல்லாம் குடையை வைத்து முகத்தை மறைத்த படி சென்று வந்ததும் தெரிய வந்தது. எனவே, கொலையாளி, ஏற்கனவே வீட்டை நோட்டமிட்டே கொள்ளையை அரங்கேற்றியிருப்பதை தெரிந்துக் கொண்ட போலீசார், அடுத்தடுத்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

தப்பிச்சென்ற ஆட்டோக்களின் எண்களை கொண்டு , அதன் ஓட்டுநர்களிடம் விசாரித்து கேகே நகரைச் சேர்ந்த சக்திவேலை கைது செய்தனர். விசாரணையில், கட்டிட உள்அலங்கார வேலைப்பார்த்து வந்த சக்திவேல் திருமணமாகி 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதும் கொரோனா காலத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக ஒரு மூதாட்டியை கொலை செய்திருப்பதும் அம்பலமானது.

கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் பணத் தேவைக்காக கேகே நகரில் வீட்டில் தனியாக இருந்த எல்ஐசி ஏஜெண்டான சீதாலட்சுமியை கொலை செய்து 12 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக கூறினான் சக்திவேல். முதியவர்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்குச் சென்று தண்ணீர் குடிப்பது போல நோட்டமிட்டு, பின்னர் 3 நாட்கள் கழித்து வீடு புகுந்து தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்து விட்டு நகைகளுடன் தப்பிசென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

முதல் கொலைக்கு பின்னர் மீண்டும், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு 3 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் இருந்ததால் பழைய டெக்னிக்கில் குடைபிடித்த படி சென்று முகத்தை மறைத்து சிவகாமசுந்தரியை கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டதாக சக்திவேல் தெரிவித்துள்ளான்.

சக்திவேலை கைது செய்து 45 சவரன் நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், வேறு ஏதேனும் கொலை, கொள்ளையில் சக்திவேல் சம்பந்தப்பட்டுள்ளானா ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.2 ஆண்டுகளாக துப்பு துலங்காத வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ள தனிப்படையினரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments