படுத்து உறங்கிய மகள்கள்.. வீட்டுக்குள் கண்ணாடிவிரியன்.. ஒரு தாயின் தரமான சம்பவம்..! பாம்புடன் கலெக்டர் அலுவலகம் வந்தார்..!

0 14892
படுத்து உறங்கிய மகள்கள்.. வீட்டுக்குள் கண்ணாடிவிரியன்.. ஒரு தாயின் தரமான சம்பவம்..!

மின்சார வசதியில்லா தனது வீட்டுக்குள் புகுந்த கண்ணடிவிரியன் பாம்பை அடித்துக் கொன்று, தூங்கிக் கொண்டிருந்த தனது மகள்களை காப்பாற்றியதாக தெரிவித்த பெண் ஒருவர், கொல்லப்பட்ட பாம்புடன் வந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கலங்க வைத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது..

தனது இரு மகள்களை காப்பாற்ற , வீட்டுக்குள் புகுந்த கொடூர விஷத்தன்மையுள்ள கண்ணாடிவிரியன் பாம்பை அடித்துக் கொன்றதாக கூறும் சமரச செல்வி இவர் தான்..!

நெல்லை மாவட்டம் வன்னி கொணந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன் கூலி தொழிலாளியான இவரது மனைவி சமரச செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமரச் செல்விக்கு சொந்தமான குடும்ப இடத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி உள்ளனர். வீடுகட்டப்பட்ட இடம் தொடர்பாக வில்லங்கம் இருப்பதாக கூறி தற்போது வரை மின்வாரியம் அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது.

பலமுறை மின்வாரியம் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை கடந்த வாரம் கூட நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி புகார் அளித்ததாகவும் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் , திங்கட்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சமரச செல்வி கையோடு எடுத்து வந்திருந்த பையில் இருந்து கொல்லப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்றை கீழே கொட்டினார்

பின்னர் அந்தப்பாம்பை பிடித்து தூக்கிய அவர், தனது மூத்த மகள் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை இருந்து வருவதாகவும் நன்றாக படிக்கும் நிலையில் மகள் இருந்தும் படிப்பிற்கு உதவ முடியாத நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக வீட்டுக்குள் விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகள் வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மகளகள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த இந்த கண்ணாடி விரியன் பாம்பை அடித்துக் கொன்று விட்டதாகவும், ஆட்சியர் நம்பவேண்டும் என்பதற்காக அதனை பையில் போட்டு எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார்

இந்த பாம்பை பார்த்த காவலர் ஒருவர் தினம் தனது வீட்டிற்கும் தான் பாம்பு வருகின்றது என்று கூறி சமாதானப்படுத்த முயன்றார்

இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பெண் போலீசார் சமரச செல்வியிடம் இருந்து பாம்பை கைப்பற்றியதுடன், சமரச செல்வியையும் அவரது மகளையும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்

புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments