கொலைகாரர்களான ரோட்டோர ரோமியோக்களால் நிர்கதியான குடும்பம்… தவறை தட்டிக்கேட்டது குற்றமா?
கல்லூரிக்குச் செல்லும் வழியில் மகள்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தந்தையை ரோட்டோர ரோமியோக்கள் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் ராணிப்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரேசன்-வள்ளி தம்பதியினருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி குடும்பம் நடத்தி வந்த சுந்தரேசனின் 2 மகள்கள் கல்லூரியிலும், ஒரு மகளும், மகனும் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
மூத்த மகள் அதேப்பகுதியைச் சேர்ந்த சரத்குமாரை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்த நிலையில், ஒரே வருடத்தில் சரத்குமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். கைக்குழந்தையோடு, தாய் வீட்டிற்கு வந்த மகளை, எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கல்லூரி படிப்பை தொடர வைத்துள்ளார் சுந்தரேசன்.
இந்நிலையில், கல்லூரிக்குச் செல்லும் வழியில் சகோதரிகளை, அதேப்பகுதியைச் சேர்ந்த சரத்குமாரின் நண்பர்களானஅஜித், சரண் ஆகியோர் அடிக்கடி கிண்டல் செய்வதோடு, தனது நண்பனின் சாவிற்கு இவர்கள் தான் காரணமெனவும் கூறி தகராறிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனை, மாணவிகள் இருவரும் பெற்றோரிடம் தெரிவிக்க கடந்த 21ம் தேதியன்று வள்ளியும் சுந்தரேசனும் பெருமாள்கோயில் அருகே நின்றுக் கொண்டிருந்த அஜித் மற்றும் சரணை தட்டிக் கேட்டுள்ளனர். இதில், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகவும் மாறி உள்ளது.
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அஜித், சுந்தரேசனின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. வாலாஜா அரசு மருத்துவமனையில் தலையில் 6 தையல் போடப்பட்ட நிலையில் அதிக ரத்தம் வெளியேறியதால் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுந்தரேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி தலைமறைவான அஜித் மற்றும் சரணை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
குடும்பத்தின் அச்சாணியாக இருந்தவரை இழந்து விட்டு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது சுந்தரேசனின் குடும்பம்.
Comments