மதுவால் வந்த வினை.. ஆதரவின்றி நிற்கும் 3 குழந்தைகள்... தீக்குளித்து கணவன்-மனைவி உயிரிழப்பு..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த கணவன்-மனைவி உயிரிழந்தனர். தோப்புக்கொல்லையைச் சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளியான அருளுக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
மதுபோதைக்கு அடிமையாகி அருள் சரிவர வேலைக்குச் செல்லாததால், ஜோசியக்காரரை சந்தித்து முத்துலட்சுமி பரிகாரம் கேட்டுள்ளார்.
அவர், கூறியபடி குடும்பத்தினரோடு ஊரிலுள்ள வீரன் கோயிலில் இரவில் படுத்து உறங்கி வந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவில் வழக்கம் போல முத்துலட்சுமி குழந்தைகளோடு கோயிலுக்குச் சென்று விட, மதுபோதையில் வீட்டிற்கு வந்த அருளின் காலில் பட்டு கேனிலிருந்த மண்ணெண்ணை காய்கறி மீது பட்டுள்ளது. காலையில், வீட்டிற்கு வந்த முத்துலட்சுமி இதுகுறித்து கேட்டபோது தம்பதியினரிடையே தகராறு ஏற்படவே, அங்கு வந்த அருளின் தாயார் தமிழேந்தி, இருவரையும் சமாதானப்படுத்தி விட்டு குழந்தைகளை தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார்.
மீண்டும் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் முத்துலட்சுமி, தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றுவதைப் பார்த்த அருளும், தன்மீது மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டுள்ளார்.
அப்போது, முத்துலட்சுமி தீக்குச்சியை பற்ற வைக்கவும் இருவர் மீதும் தீப்பற்றி எரிந்துள்ளது. பலத்த காயத்துடன் இருவரும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
Comments