தாய் - தந்தையை தவிக்கவிட மனமில்லை அதான் கொன்னுட்டேன்...! காதல் தோல்வியால் விபரீதம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கொள்ளையர்களால் தாக்கப்பட்டு இருவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பெற்ற தாய் - தந்தையை கொலை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அடுத்த விருமாண்டம்பாளையம் ஒத்தபனைமேட்டில் வேறு ஒருவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கி ஜேசிபி ஆபரேட்டராக வேலைப்பார்த்து வந்தவர் கார்த்திக்.
கார்த்திக்குடன் 56 வயதான தந்தை கிருஷ்ணமூர்த்தி, 42 வயதான தாய் ரேணுகாதேவி ஆகியோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
கார்த்தியின் தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு, தோட்டத்தில் ஜேசிபி வாகனம் ஓட்டியும், தோட்ட வேலைகளை செய்தும் கார்த்திக் பெற்றோரை காப்பாற்றி வந்ததாகக் கூறப்படுகின்றது
இச்சூழலில் தோட்டத்து வீட்டில் சனிக்கிழமை அதிகாலை தொடர்ச்சியாக நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அங்கு வந்த தோட்டத்து உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கிணற்றுக்குள் பார்த்தபோது, உள்ளே விழுந்து கிடந்த கார்த்திக், ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என அலறி உள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வெளியே தூக்கினர்.
தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கார்த்திக்கின் தாய் ரேணுகாதேவி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார், தந்தை கிருஷ்ணமூர்த்தி தலையில் காயங்களுடன் உயிருக்கு போராடி உள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.
அதிகாலை நேரத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி வாகனத்தின் பேட்டரியை திருட 2 மர்ம நபர்கள் வந்ததாகவும், அவர்களை கார்த்தி தடுத்ததாகவும், அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் கார்த்திக்கை தாக்கி கிணற்றுக்குள் தள்ளிய கொள்ளையர்கள், அதன் பின் வீட்டுக்குள் சென்று தாய் தந்தையை அடித்து கொலை செய்ததாகவும் கார்த்தி தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி போலீசார் , கார்திக்கை பிடித்து விசாரித்தனர், "பேட்டரி திருட வந்தவர்கள் அதனை தடுத்த உன்னை கிணற்றுக்குள் தள்ளியது சரி, வீட்டுக்குள் நடக்க இயலாமல் கிடந்த தாய்-தந்தையைக் கொலை செய்தது நம்புற மாதிரி இல்லையே..?" என்று சந்தேகத்தின் பேரில் கார்த்திக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காதல் தோல்வியால் கார்த்திக் எடுத்த விபரீத முடிவு அம்பலமானது.
கார்த்திக் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால், காதல் தோல்வியில் இருந்த கார்த்திக், தற்கொலை செய்வதென முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து பெற்றோரை பராமரிக்க யாரும் இல்லாததால், இரும்பு ராடால் முதலில் இருவரையும் அடித்துகொலை செய்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். கிணற்றில் குதித்த பின்னர் மனம் மாறியதால் உதவிகேட்டு அலறி கூச்சலிட்டுள்ளார்.
தாய்-தந்தையை கொலை செய்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக பேட்டரி கொள்ளையர்கள் தாக்கியதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கார்த்திக்கை கைது செய்த போலீசார் காயம்பட்ட அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தன்னை பிரிந்த காதலிக்காக தனது உயிரை விடத் துணிந்த விபரீத இளைஞர், தாய்- தந்தையை கொலை செய்த வழக்கில் சிக்கி ஜெயிலில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்
Comments