சவக்குழிக்குள் கத்தியுடன் படுத்து சடலத்தை புதைக்கவிடாமல் அடம்..! அப்புறம் நடந்த தரமான சம்பவம்..!

0 3628
சவக்குழிக்குள் கத்தியுடன் படுத்து சடலத்தை புதைக்கவிடாமல் அடம்..! அப்புறம் நடந்த தரமான சம்பவம்..!

தனக்கு சொந்தமான இடம் என்று கூறி மயானத்தில் சடலத்தை புதைக்க விடாமல் ஒருவர், சவக்குழிக்குள் படுத்து போராட்டம் நடத்திய கூத்து தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அரங்கேறி உள்ளது. 

ஆறடி நிலம் தான் சொந்தம்... அப்புறம் ஏன்டா நிலத்துக்காக அடிச்சிக்கிறீங்க..? என்று பொத்தாம் பொதுவாக புத்தி சொல்பவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக சவக்குழிக்குள் படுத்து தனது நிலத்துக்காக அடம் பிடித்த மப்பு மாரியப்பன் இவர்தான்..!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பச்சைபெருமாள்புரத்தை சேர்ந்த 80 வயது முதியவர் அப்பாவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முதியவர் உடலை இறுதி சடங்கிற்காக உறவினர்கள் கொண்டு சென்றபோது, மயானம் அருகே தனக்கு நிலம் இருப்பதாக கூறிய செல்லம்குளம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் சடலத்தை அங்கு புதைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

முதியவர் அப்பாவுக்காக தோண்டப்பட்ட சவக்குழிக்குள் கத்தியுடன் பாய்ந்த மாரியப்பன், இது தனது இடம் என்றும், பிணத்தை இங்கு புதைக்க கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

முதியவரை புதைக்க தோண்டிய குழிக்குள் இறங்கிக் கொண்டு மாரியப்பன் தகராறு செய்ததால் சம்பவ இடத்துக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். மது போதையில் கையில் கத்தியுடன் ரகளை செய்த மாரியப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெளியே வர மறுத்து அடம் பிடித்தார்.

உங்கள் நிலத்தை அளந்து தருகிறோம் என்று கூறி மாரியப்பனை வெளியே கொண்டு வந்தனர். தனது நிலத்தை அளந்து முடிவு செய்த பின்னர் தான் சடலத்தை புதைக்க வேண்டும் என்று தொடர்ந்து தர்க்கம் செய்த மாரியப்பனிடம் நிலத்துக்கான பட்டா பத்திரம் கொண்டுவருமாறு வருவாய்துறையினர் தெரிவித்த நிலையில், பத்திரம் அண்ணன்கிட்ட இருக்கு என்று சமாளித்தார்.

பட்டா கொண்டு வந்தால் பேசலாம் இல்லை என்றால் இடத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது என்று மாரியப்பனை விரட்டி விட்ட போலீசார், முதியவர் அப்பாவு சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். 80 வயதான முதியவர் அப்பாவு, அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக்கூட போராடித்தான் பெற வேண்டி இருந்ததாக தெரிவித்த அப்பகுதி மக்கள், மயானத்தை தனியார் ஆக்கிரமிக்காமல் இருக்க நில அளவையர் மூலம் உரிய முறையில் அளந்து வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments