ரூ.2 லட்சம் ஜீவனாம்சத்தை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கிய கறார் கணவன்..! மனைவியை பழிவாங்க இப்படியா..?
விவாகரத்து பெற்ற மனைவிக்கு வழங்க வேண்டிய ஜீவனாம்சம் நிலுவைத் தொகையான 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாக 11 மூட்டைகளில் எடுத்துச் சென்று சேலம் மாவட்டம் சங்ககிரி நீதிமன்றத்தில் வழங்கிய கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி நீதிமன்றத்திற்கு 11 மூட்டைகளில் 10 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து பரபரப்பு ஏற்படுத்திய ராஜி இவர் தான்.
தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி கிடையூர்மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜி, தனியார் நிறுவனத்தில் கேசியராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் மனைவி சாந்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் கோரி சங்ககிரி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு சாந்தி வழக்கு தொடர்ந்தார். சாந்திக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டுமென 2014ம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்கி வந்த நிலையில், வழக்கு தொடரப்பட்ட நாளிலிருந்து தீர்ப்பு வெளியான நாள் வரையிலான காலக்கட்டத்திற்கும் கணக்கிட்டு ஜீவனாம்ச தொகை வழங்க வேண்டுமென சாந்தி மீண்டும் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கிலும் சாந்திக்கு ஆதரவாகவே 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வழங்க நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், நொந்துப் போன ராஜி முன்னாள் மனைவிக்கு நூதன முறையில் தண்டனை வழங்க முடிவெடுத்து மொத்த தொகையையும் 10 ரூபாய் சில்லரை நாணயங்களாக மாற்றி அதனை 11 மூட்டைகளில் எடுத்து வந்து சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், 11 மூட்டைகளில் உள்ள 10 ரூபாய் நாணயங்களை என்ன செய்வது என்பது சாந்திக்கு கேள்விக்குறியாக மாறி உள்ளது.
Comments