எஸ்.பிக்காக காத்திருந்து மயங்கிப் படுத்த மூதாட்டி.. வெயில் காலம்யா பார்த்து செய்ங்க..! காக்க வைக்கலாமா நியாயமாரே..?
மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்த மூதாட்டி நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதால் மயங்கி சரிந்து அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் அறங்கேறி உள்ளது.
காவல் கண்காணிப்பாளருக்காக காத்திருந்து.. காத்திருந்து... கண்கள் பூத்து போனதால் இருக்கையில் அமர இயலாமல் மூதாட்டி மயங்கி சரிந்த காட்சிகள் தான் இவை..!
மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 11 மணிக்கு பொதுமக்களிடமிருந்து எஸ்.பி மனு பெறுவது வாடிக்கை. இந்த நிலையில் காலை 10 மணிக்கு வந்த அம்சவல்லி என்ற 70 வயது மூதாட்டி வரிசையில் அமர்ந்திருந்தார். நீண்ட நேரமாகியும் மனு வாங்கப்படாததாலும், அமர்ந்திருந்த மூதாட்டி வெயிலின் தாக்கத்தால் இருக்கையில் அமர முடியாமல் தவித்தார். ஒரு கட்டத்தில் லேசான மயக்கம் ஏற்பட்டதால் அப்படியே தரையில் படுத்து விட்டார்.
மதியம் 2.20 மணி அளவில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொள்ள தொடங்கினார்.
இதையடுத்து தூங்கிய மூதாட்டியை காவலர் எழுப்ப, அவர் கிரக்கத்துடன் இருப்பதை கண்டு முகத்தில் ஒருவர் தண்ணீர் தெளித்து குடிக்க தண்ணீர் கொடுத்தார். பின்னர் மூதாட்டியை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று ஐஜியிடம் மனுவை வழங்க வைத்தார்.
எஸ்.பி அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றதால் மனுவை வாங்க கால தாமதமானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த தகவலை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவித்து இருக்கலாம் என்றும் குறை தீர்வு கூட்டத்தை மற்றொரு நாளுக்கு ஒத்திவைத்திருந்தால் மனு அளிக்க வந்தோர் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டிருக்காது என்றும் மனு அளிக்க வந்தவர்கள் தெரிவித்தனர்.
Comments