IFS ல் ரூ.5 கோடி லஞ்சம்... டி.எஸ்.பி கபிலன் சஸ்பெண்டு..! இன்னும் எத்தனை கருப்பு ஆடுகள்..?
ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக 5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
1 லட்சம் ரூபாய்க்கு மாதம் 30 ஆயிரம் வட்டி தருவதாக ஆசைவார்த்தைகூறி 84 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் 6000 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக வேலூர் ஐ.எப்ஃ.எஸ் நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட 5 நிர்வாகிகளை கைது செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 151 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் அசையா சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஆரம்பத்தில் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கபிலனுக்கு 5 கோடி ரூபாய் வரை கையூட்டாக பணம் கொடுக்கப்பட்டதாகவும், நீலாங்கரையில் உள்ள டிஎஸ்பி கபிலன் வீட்டிலிருந்து 30 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. பொருளாதார குற்ற பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிகார பூர்வமாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், டி.எஸ்.பி கபிலனுக்கு 32 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக விசாரணையில் ஒருவர் வாக்குமூலம் அளித்ததாகவும் அதன் பேரில் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் , வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments