மூஞ்ச உடைச்சுடுவேன்.. மதுரைக்கு வந்து பாரு.. கிரிக்கெட் கேப்டனுக்கு மிரட்டல்..! அரசு பேருந்துக்கு யாரு ஓனரு..?
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனை தமிழக அரசு விரைவு பேருந்தில் ஏற்ற மறுத்து நடத்துனர் மிரட்டல் விடுத்து அவமதித்ததாக கூறி பேருந்து முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுரையை சேர்ந்தவர் சச்சின் சிவா, இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.
சம்பவத்தன்று சச்சின் சிவா சென்னையில் இருந்து மதுரை செல்ல கழிவறை வசதி உள்ள தமிழக அரசின் விரைவு பேருந்தில் ஏற முயன்றுள்ளார்.
பேருந்தின் நடத்துனர் ராஜா என்பவர், இது கழிவறை வசதி உள்ள பேருந்து இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாஸ் செல்லாது என்றும் வேறு பேருந்தில் ஏறிச்செல்லும் படி கூறி உள்ளார்.
குளிர்சாதன வசதி உள்ள பேருந்தில் மட்டும் தான் பாஸ் செல்லாது மற்றபடி அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாஸ் செல்லும் என்று அரசு அறிவித்துள்ளது என்று கூறி ஏற முயன்றுள்ளார் சச்சின் சிவா, இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூஞ்சை உடைச்சிடுவேன் என்று நடத்துனர் மிரட்டியதாக கூறி அந்த அரசு பேருந்து முன்பு அமர்ந்து சச்சின் சிவா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சமாதானப்படுத்திய நிலையில் மதுரைக்கு வா பார்த்துக்கறேன் என்று அந்த நடத்துனர் பகிரங்க மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சச்சின் சிவாவை சமாதானப்படுத்தி வேறு ஒரு அரசு பேருந்தில் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைத்தனர். தனக்கு நேர்ந்த அவமானத்தை சச்சின் சிவா வேதனையுடன் வீடியோவாக பதிவிட்டார்.
மதுரைக்கு சென்றதும் கழிவறை வசதி உள்ள SETC பேருந்தில் ஏற்ற மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சச்சின் சிவா மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள SETC விசாரணை மையத்தில் புகார் அளித்தார்.
புகார் குறித்து மாட்டுத்தாவணி காவல்துறையினர் சச்சினிடம் நேரில் விசாரணை நடத்தினர். சச்சின் சிவா புகார் தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குனருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் செயல்படும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் அதே நேரத்தில் பேருந்தில் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை குறித்து அரசு தெளிவான அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து மேலாண் இயக்குனர் , சம்பந்தப்பட்ட பேருந்தின் நடத்துனர் ராஜா என்பவரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Comments