பஞ்சாபில், முகத்தில் மூவர்ணக் கொடியுடன் சென்ற பெண்ணுக்கு பொற்கோவிலில் அனுமதி மறுப்பு..!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், மூவர்ணக் கொடியை முகத்தில் வரைந்து சென்ற பெண்ணை, பொற்கோயிலுக்குள் நுழைய அதன் நிர்வாகி ஒருவர் அனுமதிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோயில் வாயிலில் அப் பெண்ணை தடுத்து நிறுத்திய அந்நிர்வாகி, இது பஞ்சாப் என்று தெரிவித்துள்ளார். அதற்கு அப்பெண், பஞ்சாப் இந்தியாவில் இல்லையா என்று கேட்டதற்கு, அந்நபர் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
இந்த சர்ச்சை பற்றி விளக்கமளித்துள்ள குருத்வாரா நிர்வாகக் கமிட்டியின் பொதுச் செயலாளர் குர்சரன் சிங், தங்கள் ஊழியர் யாரிடமேனும் தவறாக நடந்திருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
அசோக சக்கரம் இல்லாததால் அப்பெண் முகத்தில் வரைந்திருந்தது தேசியக்கொடி போல் இல்லை என்றும், அரசியல் கட்சி கொடியாக இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். வாகா எல்லையில் வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வை முகத்தில் மூவர்ண கொடியை வரைந்தபடி பார்வையிடுவோர், அதன் பின் பொற்கோயிலுக்கும் செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments