யார் காலில் விழுந்தாவது உதவுகிறேன்.. பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்க.. நம்ம ஊரில் இப்படியும் ஒரு சூப்பர் காப்..!
பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை பெற்றோரிடம் விவரித்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவிட்டால் பெற்றோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்று எச்சரித்த சம்பவம் பென்னலூர் பேட்டையில் அரங்கேறி உள்ளது..
திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த உதவி ஆய்வாளர் பரமசிவம் என்பவர், பள்ளியில் மாணவர்கள் குறைவாக உள்ளது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார்.
அந்தப்பகுதியில் உள்ள இருளர் இன மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதாகவும் அரசு தரும் நிதி உதவியை மட்டும் பெற்றுக் கொண்டு தங்களது குடும்ப வறுமை காரணமாக அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக் கொள்வதாகவும் தேர்வு எழுத கூட வருவதில்லை எனவும் தலைமை ஆசிரியை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் .
இதை அடுத்து அப்பகுதிக்குச் சென்ற உதவி ஆய்வாளர் பரமசிவம்,அப்பகுதியில் உள்ள மக்களை அழைத்து தங்களது குழந்தைகளை உடனடியாக பள்ளிக்கு அனுப்புங்கள் எனவும் அனுப்பாத பெற்றோர்கள் மீது மத்திய அரசின் சர்வ சிக்ச அபியான் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்
பெண் பிள்ளைகள் படித்தால் நாளை அவருடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எனவும் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக எந்த நேரத்திலும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தன்னை தொடர்பு கொண்டால் யாருடைய கை கால்களில் விழுந்தாவது உங்களது பிள்ளைகளின் படிப்புக்கு உதவி செய்வேன் என அவர் கூறிச்சென்றார்.
ரவுடிகளையும், போக்கிரிகளையும் விரட்டிப்பிடிப்பது மட்டுமின்றி பிள்ளைகளின் படிப்பிற்காக பெற்றோருக்கு உறைக்குமாறும், உதவிக்கரமாகவும், குரல் கொடுத்த உதவி ஆய்வாளரின் வீடியோ அனைவரிடத்திலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இதனிடையே, குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் பரமசிவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல்துறையின் பணி அல்ல, நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.
Comments