அதெப்படி திமிங்கிலம்.. வனத்துறைக்கு தெரியாமல் வனத்தில் 4 கி.மீ சாலை ? நீலகிரியில் என்ன நடக்கிறது.?
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மேடநாடு பகுதியில் அரசியல் பிரமுகரின் உறவினரது 100 ஏக்கர் தேயிலை தோட்டத்திற்காக அத்துமீறி காப்புக்காட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மரங்களை வெட்டி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மேடநாடு காப்புக்காடு, ஒங்கி உயர்ந்த மரங்கள், கண்ணுக்கு எட்டிய தூரமெங்கும் பசுமையை போர்த்திய தேயிலைத் தோட்டங்களால் நிறைந்த பகுதியாகும். இங்கு, அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு 100 ஏக்கரில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது.
தோட்டத்திற்குச் செல்ல வனப்பாதை கட்டுப்பாட்டிலுள்ள சிறிய பாதையை அனுமதி பெற்று பயன்படுத்தி வந்த நிலையில், கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு விரிவுப்படுத்தும் பணிகள் திடீரென துவங்கின. அதிர்ச்சியடைந்த வன ஆர்வலர்களால் பாதை விரிவாக்கம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி அரியவகை மரங்கள், மூலிகை செடிகளை அழித்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதும், அரசு சாலையை தனியார் தன் கைவசப்படுத்தி கேட் அமைத்திருந்ததும் தெரிய வந்தது.
உயரதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சனை சென்றதால் வேறுவழியில்லாமல், எஸ்டேட் மேலாளர் மற்றும் 2 கனரக இயந்திர ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஜேசிபி, ரோடு ரோலர் வாகனத்தை பறிமுதல் செய்த வனத்துறை, தோட்ட உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி தங்களின் கடமையை முடித்துக் கொண்டது.
மலைப்பகுதியில் கனரக வாகனங்களை பயன்படுத்தக் கூடாதென கடுமையான உத்தரவு உள்ள நிலையில், ரோடு ரோலர், ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் எப்படி மலைப்பகுதிக்குச் சென்றன என இயற்கை ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்.
யானை வழித்தடத்தை மறைத்து கட்டப்பட்ட பல ரெஸ்டாரண்டுகள் நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி இடிக்கப்பட்ட நிலையில், மலையின் அமைப்பையே மாற்றும் வகையில் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி எப்படி கண்டுகொள்ளாமல் விடப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, கோத்தகிரி வனச்சரகர் சிவாவிடம் கேட்ட போது, தேயிலை தோட்டத்திற்காக பாதையை பயன்படுத்த அனுமதி உள்ளது. அதன்படி அதிலுள்ள சிறிய பள்ளங்களை மட்டுமே சரி செய்துள்ளனர் என்று மிகப்பெரிய விளக்கத்தை அளித்துள்ளார்.
சிறிய பிளாஸ்டிக் பையை எடுத்துச் சென்றாலே தோண்டித்துருவி ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கும் வனத்துறையினர் கண்ணுக்கு இவ்வளவு பெரிய விதிமீறல் மட்டும் எப்படி தெரியாமல் போனது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
Comments