வெளிநாட்டு வேலைக்குச் சென்று வீல் சேரில் திரும்பிய மகன்.. மகனின் நிலை கண்டு கதறிய தாய்..!

0 26479

குடும்ப வறுமையால் பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற இளைஞர் அங்கு நேர்ந்த விபத்தில் சிக்கி நடமாட முடியாமல் போன நிலையில், 4 மாதங்கள் போராடி மகனை சென்னைக்கு வரவழைத்த தாய், அவரைப் பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கலங்கடித்தது..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த சுப்பையா - அழகி தம்பதிக்கு வீரபாண்டி, அழகுபெருமாள் என இரண்டு மகன்கள் உள்ளனர். கட்டட வேலை செய்து வந்த சுப்பையா சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் ஒரு காலை இழந்து வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார்.

வருமானமின்றி குடும்பம் வறுமையில் விழுந்ததால், 10ஆம் வகுப்பு வரை படித்திருந்த வீரபாண்டி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பஹ்ரைன் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். டிசம்பர் மாதம் 7ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்று அறைக்குத் திரும்பும்போது, கனரக வாகனம் மோதி வீரபாண்டி படுகாயமடைதுள்ளார். உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவரின் உயிர் போராடி காப்பாற்றப்பட்டுள்ளது.

மகனை சொந்த ஊர் அழைத்து வருவதற்கு பல லட்சம் செலவு, பல்வேறு விதிமுறைகள் இருந்த நிலையில், 4 மாதங்களாக பலரையும் சந்தித்து உதவி கேட்டுள்ளார் தாய் அழகி. இறுதியாக வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முறையிட்டதன் தொடர்ச்சியாக வீரபாண்டி சென்னை அழைத்துவரப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் வீல் சேரில், கை,கால்கள் முடங்கிய நிலையில், எலும்பும் தோலுமாக அழைத்து வரப்பட்ட மகனைப் பார்த்து தாய் கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது.

மூக்கில் நுழைக்கப்பட்ட குழாயுடன், வாய் பேச முடியாமல், சுற்றி இருப்பவர்களையும் உணர முடியாமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்த வீரபாண்டி, தன்னைக் கட்டியணைத்து முத்தமிட்டு, கதறித் துடித்த தாயைக் கண்டதும் கண்ணீர் விட்டார்.

விமான நிலையத்திலிருந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வீரபாண்டிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments