தமிழ் புத்தாண்டு... கோவில்களில் சிறப்பு வழிபாடு
மகிழ்ச்சிகரமான மங்கலகரமான வருடமாக சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், காலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் சித்திரை திங்கள் முதல் நாள், தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் படி, சுபகிருது வருடம் முடிந்து இன்று முதல் சோபகிருது ஆண்டு தொடங்கியுள்ளது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான வருடமான தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், அனைவருக்கும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டி பக்தர்கள் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள், கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. கோவில் உள்பிரகாரத்தில் கனி காணும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மூலவர் கற்பக விநாயகர் தங்கம் - வெள்ளி கவசங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், தமிழ்புத்தாண்டை முன்னிட்டு, சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலயத்திற்கு பொதுமக்கள் பால் குடம் எடுத்து வழிபட்டனர்.
தமிழ் புத்தாண்டை ஒட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலிலும் பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து வழிபட்டனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மலையடிவாரத்தில் இருந்து தீர்த்தக்குடங்கள், காவடிகளை எடுத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்த பக்தர்கள், மலைமீதுள்ள முருகப்பெருமானை தரிசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஸ்ரீ அஞ்சலி வரத விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை மாதம் முதல் நாளை முன்னிட்டு, 10 ஆயிரத்து 8 பழக்காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தனர். மீனாட்சியம்மன் வைர கிரீடம், முத்துமாலை, தங்கப்பாவாடை உடனும், சுந்தரேஸ்வரர் வைர, வைடூரிய திருவாபரணங்கள் அணிந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து பெருவுடையாரை தரிசித்தனர்.
புகழ்பெற்ற நாமக்கல் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் 500 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களை கொண்டு 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஜொலிக்கும் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நடைபெற்றது.
Comments