கால்கள் செயலிழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத நீச்சல் வீரரின் சாதனை..! பாக்ஜல சந்தியை நீந்திக் கடந்தார்

0 1689

கால்கள் செயல் இழந்த மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஒருவர், இலங்கையின் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தியை கடலில் நீந்திக் கடந்துள்ளார். தன்னம்பிக்கையால் வெற்றியை தொட்ட சென்னை இளைஞரின் சாதனை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

எம் புள்ளைக்கு நடக்க முடியலீங்க... மனவளர்ச்சியும் குன்றி இருக்கு... அவன் வாழ்க்கையே முடங்கிப்போச்சு என்று பரிதவிக்கும் பெற்றோர் மத்தியில்... எல்லாரையும் போல எங்க புள்ளையும் சாதிப்பான் என்று ஊக்கம் கொடுத்த பெற்றோரின் உறுதுணையால் இன்று தன்னம்பிக்கையுடன் சாதனையாளராக விளங்கும் மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ் இவர் தான்..!

வாய் பேச இயலாது... ஊன்று கோல் இல்லாமல் தனியாக நிமிர்ந்து நடக்க இயலாது... கைகள் வழக்கமாக செயல்படாது... இவருக்கு வயது 28 ஆனாலும் மனதளவில் இன்றும் 11 வயது சிறுவன் தான்... சென்னையை சேர்ந்த ராஜசேகர் - வனிதா தம்பதியரின் மகனான ஸ்ரீனிவாசுக்கு பிறவியிலேயே செரிபிரல்பால்ஸி என்கிற பெருமூளை வாத நோயால் இந்த குறைபாடுகள் இருந்துள்ளது. தங்கள் மகனை சாதனையாளனாக்க, சிறுவயது முதலே ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் என்று சொல்லக்கூடிய நீச்சல் பயிற்சியில் ஈடுபடுத்தி உள்ளனர்.

வலிகளை கடந்தால் தான் வரலாற்றில் இடம் பெற முடியும் என்பதை தனது தீவிர நீச்சல் பயிற்சியால் உணர்ந்த ஸ்ரீனிவாஸ், கடந்த 2018 ஆம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து சென்னை வரை நீச்சல் அடித்து சாதனைப்படைத்து முன்மாதிரி இளைஞருக்கான தேசிய விருதை அப்போதைய குடியரசு துணைத்தலைவர் வெங்கையாவிடம் இருந்து பெற்றார். அந்த சாதனையின் தொடர்ச்சியாக இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடிவரை பாக்ஜலசந்தியை நீந்திக்கடக்க முடிவு செய்தார்

அதற்கான தீவிர பயிற்சியின் பலனாய் , ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியில் இருந்து உறவினர்கள் வாழ்த்துக்களுடன் உற்சாகமாக படகில் புறப்பட்டுச்சென்ற இளைஞர் ஸ்ரீனிவாஸ், பயிற்சியாளர்கள் படை சூழ கடலுக்குள் இறங்கி தனது மார்பு பகுதியை மட்டும் அசைத்து கடலில் நீச்சல் அடித்து இரவும் பகலுமாக 30 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து தனுஷ்கோடிக்கு வெற்றிகரமாக வந்து சேர்ந்தார்

தான் சாதித்து விட்டதை வார்த்தைகளால் சொல்ல இயலாத ஸ்ரீனிவாஸ் விசில் அடித்து தெரிவித்தார். உற்சாகமாக காணப்பட்ட ஸ்ரீனிவாஸை, அவர் உடன் வந்த பயிற்சியாளர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் தூக்கி கொண்டாடினர்.

அவருக்கு சாதனைக்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. தங்கள் மகனை போல பெருமூளைவாதம் என்கிற விசித்திர நோயால் யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தங்களது மகனை இந்த சாதனையை செய்ய வைத்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.

முயற்சி இருந்தால் வேதனைகளை சாதனைகளாக்க இயலும் என்பதற்கு ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸும் அவரது பெற்றோரும் மற்றுமொரு நிகழ்கால உதாரணம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments