மாணவிகளிடம் செல்போனில் வம்பிழுத்த ஆபாச வாத்தி வகுப்பறையில் சிறைவைப்பு..! தெறிக்க விட்ட கிராம மக்கள்..
பரமத்திவேலூரை அடுத்துள்ள கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்ததாக பள்ளி ஆசிரியரை பெற்றோர்கள் அடிக்க பாய்ந்ததால், அவரை வகுப்பறையில் வைத்து பூட்டும் நிலை ஏற்பட்டது. மாணவிகளிடம் வம்பிழுத்த வாத்தியை வார்த்தைகளால் வறுத்தெடுத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
ஊர் மக்களின் வசவு வார்த்தைகளால் முறைவாசல் செய்யப்பட்ட ஆபாச வாத்தி பன்னீர்செல்வம் இவர்தான்..!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக உள்ள பன்னீர்செல்வம் என்பவர், அப்பள்ளியில் பயிலும் மாணவிகளை ஆபாசமாக செல்போனில் போட்டோ வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த ஊர்மக்கள், பன்னீர் செல்வத்தை தேடினர். அவரை யாரும் தாக்கி விடக்கூடாது என்று, தலைமை ஆசிரியை சர்மிளா பாதுகாப்பாக ஒரு வகுப்பறையில் பூட்டி வைத்ததால், அவரை சூழ்ந்துகொண்டு மக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
விசாரணைக்கு வந்த போலீசாரும், ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பாதுகாப்பதிலேயே அக்கறை காட்டியதால், கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல மக்கள் முயன்றனர்.
இதற்கிடையே பன்னீர்செல்வத்தின் ஆபாச சேட்டை குறித்து தகவலறிந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சமூக அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் காவல் ஏடிஎஸ்பி மணிமாறன், பரமத்திவேலூர் டிஎஸ்பி கலையரசன் தலைமையிலான போலீசார், ஆசிரியரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அதில் மாணவிகளின் ஆபாச படம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே பெருமளவில் திரண்ட மக்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். பன்னீர்செல்வத்தை போலீசார் பரமத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும்போது, போலீசாரின் வாகனத்தை, பள்ளியிலிருந்து வெளியே செல்ல விடாமல் தடுத்தனர்.
செல்போனில் உள்ள படங்களை ஆதாரமாக கொண்டு ஆசிரியர் பன்னீர்செல்வத்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர் . பன்னீர்செல்வத்தின் மனைவி பரமத்திவேலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட வாழவந்தி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பன்னீர்செல்வத்திற்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் ஒரு மகன், தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஒரு மகள் உள்ளனர்.
பள்ளி நேரத்திலும் பன்னீர்செல்வம் ஆபாச படங்களை பார்ப்பது வழக்கமாக கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments