வார்டு உறுப்பினர்கள் வம்பு.. 5 பெண் குழந்தைகள் தவிப்பு .. தாய் எடுத்த விபரீத முடிவு..! ஓடும் பேருந்தில் இருந்து குதித்தார்..!
திருமங்கலம் அருகே மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கிய வேலையை செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாக பேசி மிரட்டிய வார்டு உறுப்பினர்களால் விரக்திக்குள்ளான பெண், ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. விபரீத முடிவால் 5 பெண் குழந்தைகள் தாயை இழந்து தவிக்கும் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், இவரது மனைவி நாகலட்சுமி இந்த தம்பதிக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து உதவிகேட்ட நிலையில் நாகலட்சுமிக்கு, 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணி வழங்கி மாவட்ட ஆட்சியர் பணி ஆணை வழங்கினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நாகலெட்சுமி பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் மையிட்டான் பட்டி கிராமத்திலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்காக பேருந்தில் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். பேருந்து சிவரக்கோட்டை அருகே உள்ள அனுமான் கோயில் பகுதியில் வந்த பொழுது நாகலட்சுமி தன்னுடைய 2 பெண் குழந்தைகளையும் அருகில் பயணம் செய்த சக பயணிகளிடம் ஒப்படைத்து விட்டு திடீரென ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பேருந்தில் இருந்து குதித்ததால் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நாகலட்சுமியை மீட்டு கள்ளிக்குடி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகலட்சுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இறந்த நாகலட்சுமியின் கைப்பையில் கடிதம் ஒன்று இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அந்தக் கடிதத்தில் 100 நாள் வேலை பொறுப்பாளராக பணிபுரிய கலெக்டர் பணி ஆணை வழங்கியதாகவும் அந்த வேலையை தனக்கு வழங்க மாட்டேன் என்று மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரகுமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து ஆகியோர் தவறாக பேசி மனதை காயப்படுத்தியதாகவும் அதற்காக தான் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்திருந்தார்
ஏன் புகார் அளிக்கிறாய் என்று தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி தற்கொலை முயற்சிக்கு தன்னை ஆளாக்கியதாகவும், தனக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ளது. அதனால் வேலை கேட்டது தவறா? என்று கேள்வி எழுப்பி உள்ள நாகலட்சுமி, தனது தற்கொலை முயற்சிக்கு முக்கிய காரணம் மையிட்டான்பட்டி கிளார்க் முத்து, வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் ஆகியோர் என்னை அடிக்க கை ஓங்கி அசிங்கப்படுத்தியது தான் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை வரும் வரை நாகலட்சுமியின் குழந்தைகள் இரண்டும் ஆதரவின்றி மருத்துவமனை வளாகத்தில் தாயை இழந்தது கூட தெரியாமல் அழுது கொண்டிருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது
அதே நேரத்தில் திருப்பூரில் தங்கி கூலிவேலை பார்த்து வந்த நாகலட்சுமியின் கணவர் கணேசன் மனைவிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்து 5 பெண்குழந்தைகளை இனி எப்படி வளர்க்க போகிறோம் என்று கலங்கிபோய் நின்றார்.
Comments