பால் கூட தரக்கூடாதுன்னு பஞ்சாயத்தார் சொல்லிருக்காங்க... அபராதத்துக்கு அஞ்சும் கடைக்காரர்...! இந்த நாட்டாமை பூனைக்கு மணிகட்டுவது யார்...?

0 1973
பால் கூட தரக்கூடாதுன்னு பஞ்சாயத்தார் சொல்லிருக்காங்க... அபராதத்துக்கு அஞ்சும் கடைக்காரர்...! இந்த நாட்டாமை பூனைக்கு மணிகட்டுவது யார்...?

கிருஷ்ணகிரி மாவட்டம் மாரண்டபள்ளி கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால், அபராதத்துக்கு பயந்து அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, மளிகைக்கடைகளில் பால் பாக்கெட் கூட கொடுக்காமல் திருப்பி அனுப்பும் வீடியோ வெளியாகி உள்ளது.

இவங்க இவ்வளவு பேரும் கூட்டம் போட்டு, ஏதோ நல்ல காரியம் செய்ய போறாங்கன்னு தவறாக நினைத்து விட வேண்டாம்.. நாட்டாமை படத்தில் வருவது போல, ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில், நல்லா இருந்த ஒரு குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைப்பதற்குதான், இந்த கட்டப்பஞ்சாயத்துக்கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது உறவினர்கள் 15க்கும் மேற்பட்டோர் அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்களுடன் உண்டான நிலப்பிரச்னை தொடர்பாக பேசி தீர்ப்பதற்காக கூடிய கட்டப்பஞ்சாயத்து குழுவின் விசாரணைக்கு, கிருஷ்ணன் செல்ல மறுத்ததால், அன்று முதல் கிருஷ்ணன் மீது தேவையற்ற அவதூறுகளை ஊர் பெரியோர்கள் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பாக, மீண்டும் கட்டப்பஞ்சாயத்து குழு கூடியது. அப்போது ஊருக்கு கட்டுப்படும் வரை கிருஷ்ணனுடன் யாரும் பேசக்கூடாது என்று கூறிய பஞ்சாயத்தார், 5000 ரூபாய் அபராதமும் விதித்ததாக கூறப்படுகின்றது. இதனை ஏற்க மறுத்ததால் கிருஷ்ணன் குடும்பத்தை ஊரை விட்டு முற்றிலுமாக ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகின்றது. கிருஷ்ணன் குடும்பத்திற்கு கடைகளில் மளிகைப்பொருட்கள், பால் போன்ற எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களும் கொடுக்கக்கூடாது எனவும், மீறினால் அவர்களுக்கும் 5000 ரூபாய் அபராதம் விதித்து ஊரை விட்டு தள்ளி வைப்போம் என மிரட்டி, கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.

சூளகிரியில் கிருஷ்ணனின் மகள் காஞ்சனா நர்சிங் பயிற்சியில் இருந்த மருத்துவமனைக்கு சென்ற கட்டப்பஞ்சாயத்து குழுவினர், கிருஷ்ணன் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக கூறி, காஞ்சனாவுக்கு இந்த மருத்துவமனையில் பயிற்சி அளிக்கக்கூடாது என மிரட்டியதாக வேதனையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments