13 ஓட்டுத்தான் போட்டாய்ங்க.. ரோட்டை போடாமல் நிறுத்திய கோட்டையம்மாள்..! கற்குவியலால் சாலையில் தடை

0 5073

காரைக்குடி அருகே உள்ள பூதங்குடி கிராமத்தில் கோவிலில் முதல் மரியாதை தரவில்லை என்றும் தேர்தலில் தனக்கு ஓட்டுப் போடவில்லை என்ற ஆத்திரத்திலும் பெண் பஞ்சாயத்து தலைவர், மெட்டல் சாலை அமைக்க தடையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் , தேவகோட்டை அடுத்த புத்தூரணி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கோட்டையம்மாள். 14 கிராமங்களை உள்ளடக்கிய இந்த பஞ்சாயத்தில் உள்ள பூதங்குடி கோட்டையம்மாளின் சொந்த ஊராகும். இங்கு 25 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் 150 வாக்காளர்களும் உள்ளனர் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுவரை மண்சாலையாகவே இருந்து வந்துள்ளது.

கடந்த 2019 ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏழு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய மெட்டல் சாலை போட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக பணிகள் மெல்ல துவங்கி ஜல்லிக் கற்கள் சாலை நடுவே குவித்து வைக்கப்பட்டநிலையில் கடந்த நான்கு மாத காலமாக பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

ஜல்லிக் கற்கள் குவியலாக சாலை நடுவே போடப்பட்டுள்ளதால் கிராம மக்கள் விவசாயத்திற்குத் தேவையான உர மூட்டைகளையும், அறுவடை இயந்திரம் மற்றும் டிராக்டர்களை ஊருக்குள் எடுத்து வரவோ, ஊரிலிருந்து வெளியே எடுத்துச் செல்லவோ முடியாமல் மிகவும் சிரமபட்டு வருகின்றனர்.

புத்துராணி ஊராட்சி மன்றத் தலைவரான கோட்டையம்மாள் தான், சாலை அமைக்கும் பணியை செய்து வந்ததாகவும் 15 சென்டிமீட்டர் உயரம் போட வேண்டிய சாலையை, ஐந்து சென்டிமீட்டர் அளவிற்கு தரமில்லாமல் போட முயன்றதாகவும் இப்படி சாலை அமைத்தால் அதற்கான தொகை தரப்பட மாட்டாது என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியவுடன் சாலை போடும் பணியை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகின்றது.

பூதங்குடி கிராம மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றும், கோயில்களில் அவருக்கு முதல் மரியாதை தரவில்லை என்ற ஆத்திரத்திலும், சாலைப் பணியை தரமற்ற முறையில் மேற்கொண்ட கோட்டையம்மாள் தற்போது சாலைப் பணியை தடுத்து வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் திட்ட அதிகாரி ஆகியோரிடம் புகார் அளித்தும் இதுவரை சாலை போடப்படவில்லை என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து புத்தூரணி பஞ்சாயத்து தலைவர் கோட்டையம்மாளை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனக்கு அந்த ஊரில் விழுந்ததே 13 ஓட்டுதான் என்றும், கோவில்களில் பிரச்சனை இருப்பதெல்லாம் உண்மைதான் அதை நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன், சாலைப்பணி நிற்பதற்கு தான் காரணமல்ல என்றும் பாலம் அமைக்கும் பணி முடிவடையாமல் இருப்பதாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதாலும் சாலையை பணியை மேற்கொள்ளவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments