ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்..!
தமிழ்நாடு ஆளுநர் செயல்பாட்டுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்த தனித் தீர்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றபட்டது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பேரவையின் கதவுகள் மூடப்பட்டு நடைபெற்ற வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 144 பேரும், எதிராக இரு பாஜக எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் முன்னதாகவே வெளிநடப்பு செய்து விட்டதால் வாக்கெடுப்பின் போது பேரவையில் இல்லை.
இதனை தொடர்ந்து தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர், ராஜ் பவனை அரசியல் பவனாக ஆளுநர் மாற்றி விட்டதாகவும், அரசியல் நோக்கத்தில் ஆளுநர் இடையூறு தந்தால் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், சாகும் வரை ஒரு மசோதாவை ஆளுநர் நிறைவேற்றாமல் வைத்துக் கொள்ளலாம் என்பதுதான் சட்டத்தில் உள்ள ஓட்டை எனக்கூறினார். அதனைத் தொடர்ந்து, ஆளுநரின் செயல்பாடுகளை விமர்த்து துரைமுருகன் காட்டமாக பேசினார்.
பின்னர், ஆளுநர் செயல்பாட்டுக்கு எதிராக கொண்டுவந்த தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Comments