காணாமல் போன கல்லூரி மாணவி.. கம்ப்ளைன்ட் கொடுத்த பெற்றோர்.. காதலனுடன் வாழ்த்தி வழி அனுப்பி வைத்த போலீஸ்.. தம்பதியை மீண்டும் தேட காரணம் என்ன ?
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவியை திருமணம் செய்து தஞ்சமடைந்த இளைஞரை போலீசார் வாழ்த்தி வழியனுப்பிய நிலையில் 4-நாட்களுக்கு பின், குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அதே இளைஞன் மீது கடத்தல் மற்றும் போக்ஸோ வழக்குகளை பதிவு செய்து தேடி வரும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த ஜெனிஷ் என்ற இளைஞன் அரசு கலை கல்லூரி மாணவி ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கடந்த 4-ம் தேதி செவ்வாய்கிழமை கருங்கல் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீசாரும் அவர்களின் திருமண ஆவணங்களை முறைப்படி ஆய்வு செய்து மேஜர் என்பதால் அவர்களிடம் எழுதி வாங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.
தகவலறிந்து காவல் நிலையம் வந்த மாணவியின் தாய், 18 வயது நிரம்பாத தனது மகளை காணவில்லை என பிப்ரவரி மாதம் இதே காவல் நிலையத்தில் புகாரளித்திருந்ததாகவும் அதன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். காணாமல் போனவரை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்காமல், திருமணம் செய்துகொண்டு வந்தவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்திருக்கிறீர்களே. என்ன நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதென்னடா வம்பா போச்சு என அதிர்ச்சியடைந்த போலீசார், புதுமண ஜோடியை விசாரணைக்காக காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர். உஷாரான ஜெனிஷ், மனைவியை மட்டும் காவல் நிலையம் அனுப்பி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளான்.
விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மாணவிக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருப்பதும், ஆனால் கடந்த பிப்ரவரி மாதமே ஜெனிஷ் அவரை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் மாணவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், ஏற்கனவே மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மாணவி சமூகநலத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டார். ஜெனிஷ் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள குளச்சல் அனைத்து மகளிர் போலீசாருக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
அதன் பேரில் ஜெனிஷ் மீது கடத்தல், போக்சோ ஆகிய வழக்குகள் பதிவு செய்து, அவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments