தரமான அரிசி வரும் வரை யாரும் ரேசன் கடையில் அரிசியை வாங்காதீங்க..! திமுக எம்.எல்.ஏ சொல்கிறார்

0 2109
தரமான அரிசி வரும் வரை யாரும் ரேசன் கடையில் அரிசியை வாங்காதீங்க..! திமுக எம்.எல்.ஏ சொல்கிறார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதிக்குட்பட்ட வி.புதூர் கிராமத்துக்கு கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு சென்ற திமுக எம்.எல் ஏவை முற்றுகையிட்ட பெண்கள் ரேசன் கடையில் பூச்சிகளுடன் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாகப் புகார் தெரிவித்தனர்.  இந்த வாரமே சரிசெய்யப் போவதாகவும், அதுவரை யாரும் ரேசன் அரிசியை வாங்க வேண்டாம் என்றும் எம்.எல்.ஏ கூறிச்சென்றார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வி.புதூரில், 14-வார்டான வீர காளியம்மன் கோவில் தெருவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டின் துவக்க விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம், தங்களுக்கு நியாய விலைக் கடையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி பூச்சிகளுடன் தரமற்ற முறையில் இருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். சட்டமன்ற உறுப்பினரின் கையில் தரமற்ற அரிசியை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொலைபேசியின் வாயிலாக உணவுப் பொருள் வழங்கல் அதிகாரியை தொடர்பு கொண்டு, "இதுபோன்ற தரமற்ற அரிசியை பொது மக்களுக்கு வழங்கலாமா..? என்றும் இந்த அரிசியை செகரெட்டரியேட்டில் அமைச்சரை சந்தித்து கொடுப்பேன் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.

உடனடியாக அரிசியை மாற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அடுத்தடுத்து ரேசன் அரிசியுடன் ஏராளமான பெண்கள் முற்றுகையிட்டதால் உறுப்பினர் சேர்க்கை முகாமை முடித்துக் கொண்டு, "நீங்கள் யாரும் அரிசியை வாங்காதீங்க....இந்த வாரமே அரிசியை மாற்றிவிட்டு சொல்கிறேன்...அப்புறம் வாங்குங்க.." என்று கூறிச்சென்றார்.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் ரேசன் அரிசி குறித்து பொதுமக்கள் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்து வருவதால், ஒவ்வொரு மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலும், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நேரடியாக ஆய்வு செய்து மக்களுக்கு தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments