கபடி விளையாட்டால் விபரீதம்.. வன்னிக்குடி கில்லி ராஜாவுக்கு முகத்தில் எலும்பு முறிந்தது..! முகம் மாறியதால் உண்டான சிக்கல்

0 2777
கபடி விளையாட்டால் விபரீதம்.. வன்னிக்குடி கில்லி ராஜாவுக்கு முகத்தில் எலும்பு முறிந்தது..! முகம் மாறியதால் உண்டான சிக்கல்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விளையாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட கபடி போட்டியில் எதிர்அணி வீரரால் முட்டித்தள்ளப்பட்டதால், முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட 23 வயது இளைஞரின் முகம் அறுவை சிகிச்சைக்கு பின் உருமாறியதால், பாஸ்போர்ட் இருந்தும் வெளி நாட்டு வேலைக்கு செல்ல இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான கபடி போட்டியின் போது ஆக்ரோசமாக மோதியதால் முகத்தில் எலும்பு முறிந்து, முகம் மாறி தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் வன்னிக்குடி கிராமத்து கபடி வீரர் ராஜா இவர்தான்..!

சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்ததால் தனது சகோதரியின் வீட்டில் வசித்து வரும் 23 வயதான ராஜா நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்... தனக்கு பேரையும், புகழையும் , ஏராளமான பரிசு கோப்பைகளையும் பெற்றுத்தந்த கபடி போட்டியால் தனது வாழ்வே தவித்து நிற்கும் என்று..!

கடந்த பிப்ரவரி மாதம் 27 ந்தேதி , ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சீதகாதிசேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் வன்னிக்குடி ஜே.எஸ் ஸ்போர்ட்ஸ் அணியும், ஆலங்குளம் அணியும் களமிறங்கியது. இதில் பாடி வந்த எதிர் அணி வீரரை பிடிக்க ஆக்ரோசமாக ஓடிய போது வன்னிக்குடி வீரர் ராஜா முகத்தில் எதிர் அணி வீரரின் தலை தட்டியதாக கூறப்படுகின்றது

இதில் எதிர் அணி வீரர் புள்ளிகளை பெற்ற நிலையில் அப்படியே விழுந்த ராஜாவுக்கு, முகத்தில் தீராத வலி உண்டானதால் தொடர்ந்து விளையாட இயலாமல் அவதிக்குள்ளானார். அங்கு முதல் உதவிக்கு மருத்துவ குழுவோ, அவசர உதவிக்கு ஆம்புலன்ஸோ இல்லாததால் அவரது அணி வீரர்களே ராஜாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அவருக்கு கண்ணுக்கு மேல் பகுதியிலும், கன்னத்திலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவரது முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறிய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர். வறுமையான குடும்ப சூழலை கொண்ட ராஜாவுக்கு, மாவட்ட நிர்வாகமோ , விளையாட்டு ஆணையமோ உதவ முன்வராத நிலையில் வன்னிக்குடி கிராமத்து இளைஞர்களும், வெளி நாடுகளில் தங்கி பணிபுரியும் ராஜாவின் நண்பர்களும் உதவிக்கரம் நீட்டியதால் தனியார் மருத்துவமனையில் ராஜாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முகத்தில் பிளேட் வைக்கப்பட்டது

மார்ச் 17 ந்தேதிவரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராஜா தொடர்ந்து அந்த பிளேட்டை அகற்றி முழுமையான மேல் சிகிச்சை மேற்கொள்ள பணமில்லாததால் வீட்டிற்கு திரும்பி கண்ணாடியை பார்த்த போது பேரதிர்ச்சி அடைந்தார்.

முகத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால் முகம் உருமாறி இருந்தது . சில தினங்களில் வெளி நாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக காத்திருந்த நிலையில் பாஸ்போர்டில் உள்ள முகமும் , தற்போது உள்ள முகமும் மாறி இருந்ததால் வெளிநாடு செல்ல இயலாது என்று தெரிவித்துள்ளனர்..! இதனால் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவும் சிதைந்தது..! அடுத்து என்னசெய்வதென்று தெரியாமல் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ராஜா.

பாதிக்கப்பட்ட கபடி வீரரின் மேல் சிகிச்சைக்காக அரசும், மாவட்ட நிர்வாகமும் தக்க உதவி செய்ய வேண்டும் என்று வன்னிக்குடியில் உள்ள சக கபடி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கபடி வீரர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்று உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ள ராஜா, அரசின் உதவியை எதிர் நோக்கி காத்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments