மது ஊற்றிக்கொடுத்து மென்பொறியாளர் காருடன் எரித்துக் கொலை..! காதல் பஞ்சாயத்தில் பயங்கரம்

0 2679

திருப்பதியில், மென்பொறியாளர் ஒருவருக்கு மது ஊற்றிக்கொடுத்து அடித்து கொலை செய்து காருடன் தீவைத்து கொல்லப்பட்ட நிலையில், கார் தீப்பற்றி எரியும்  வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. தம்பியின் தவறான காதலை ஊரார் மத்தியில் அம்பலப்படுத்திய அண்ணனுக்கு நிகழ்ந்த கொடூரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

திருப்பதி அடுத்த, சந்திரகிரி மண்டலம், பொப்புராஜப்பள்ளி கிராமத்தில் கடந்த ஒன்றாம் தேதி நள்ளிரவு மர்மமான முறையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீப்பற்றி எரிந்த காருக்குள் இருந்து ஆண் சடலம் ஒன்றை மீட்டனர். காரின் பின் இருக்கையில் சடலம் கிடந்ததால் யாரோ அவரை அடித்து கொலை செய்து காருக்கு தீவைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்த நிலையில், கார் என்ஜினின் சேசிஸ் நம்பரை வைத்து காரின் பதிவெண்ணைக் கண்டுபிடித்து அதன் மூலம் காருக்குள் சடலமாக கிடந்தவர் வெதுருகுப்பம் மண்டலத்தை சேர்ந்த மென்பொறியாளர் நாகராஜு என்பது தெரியவந்தது.

நாகராஜை உயிரோடு எரித்து கொலை செய்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காதல் பஞ்சாயத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

மென்பொறியாளர் நாகராஜனின் சகோதரர் புருஷோத்தம், பொம்மலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரூபின் என்பவரின் மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும், இந்த திருமணம் கடந்த காதல் விவகாரம் குறித்து மென்பொறியாளர் நாகராஜன் ஊராரிடம் புகார் கூறியதால் ரூபினின் மனைவி பெயர் வெளியில் தெரிந்து அவரும் அவமானத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

இதனால் நாகராஜு மற்றும் அவரது சகோதரர் புருசோத்தம் மீது ஆத்திரம் கொண்டுள்ளார் ரூபின். புருஷோத்தமின் காதல் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாகராஜுவை அழைத்த ரூபின் அவருக்கு மதுவை ஊற்றிக்கொடுத்துள்ளார்.

போதையில் மயங்கி தள்ளாடிய நாகராஜுவை ஆதரவாளர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த ரூபின், உடலை காரில் தூக்கிப்போட்டு காருக்கு தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக ரூபின் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக இருக்கும் பிரதாப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments