சென்னை - கோவை இடையே வந்ததே “வந்தே பாரத்”.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..

0 3310

சென்னை - கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி நாளை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலின் 12-வது சேவை சென்னை - கோயம்புத்தூர் இடையே நாளை முதல் தொடங்குகிறது. இச்சேவையை மாலை 4 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த “வந்தே பாரத் ரயில்” நின்று செல்லும். மொத்தம் 5 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்னையில் இருந்து கோவைக்கு சென்றடையும் எனவும், அதே பயண நேரத்தில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்தடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோவை இடையே இயக்கப்பட்டு வரும் சதாப்தி உட்பட ஓரிரு விரைவு ரயில்கள் தற்போது 7 மணி நேரத்தில் சென்றடைகின்றன. இண்டர்சிட்டி, நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் உள்ளிட்ட பிற ரயில்கள் 8 மணி முதல் 8.30 மணி நேரத்தில் சென்றடைகிறது

'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். மறு மார்க்கத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் சென்றடையும்.

சென்னையிலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் வந்தேபாரத் ரயில், சேலம் ஜங்ஷனுக்கு மாலை 5.48 மணிக்கு சென்றடையும். அதாவது, சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரம் 23 நிமிடங்களில் நாம் சென்றடையலாம்.

ஈரோட்டிற்கு மாலை 6.32 மணிக்கும், திருப்பூருக்கு 7.13 மணிக்கும் செல்லும் வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து, 5 மணி நேரம் 50 நிமிட பயணத்தில், கோயம்புத்தூரை சென்றடைகிறது.

வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் குளிர்சாதன chair car டிக்கெட் ரூபாய் 1215 என்றும், உணவு உட்பட குளிர்சாதன excutive chair car ரூபாய் 2310 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 ஏசி பெட்டிகளுடன் இயக்கப்படும் ரயிலில் 536 இருக்கைகள் இருக்கும். அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் இரண்டாயிரத்து 37 கி.மீ நீளமுள்ள பாதையில், வேகத்தை மேம்படுத்தும் பணிகள் இந்த ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயிலின் பராமரிப்புப் பணிகள் கோவை பணிமனையில் நடைபெறும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, தாம்பரம் - செங்கோட்டை இடையே விரைவு ரயில் சேவையையும், திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கிமீ தொலைவுக்கு 294 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை பணிகளையும் துவக்கி வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments