ஐயா...இது தான் உங்க டக்கா..? 3வது முறையாக தாக்குதல்.. கொல்லப்பட்ட விவசாயி..! போலீசை முற்றுகையிட்ட உறவினர்கள்

0 2134

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நிலப்பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே 2 முறை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத போலீசாரின் மெத்தனத்தால், 3 வது முறையாக தாக்குதலுக்குள்ளான விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். கொலைச் சம்பவத்துக்கு காரணமான காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி உறவினர்கள் சவக்கிடங்கருகே காத்திருந்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் 60 வயதான விவசாயி முருகேசன். இவருக்கும் , அவரது உறவினர்கள் சிலருக்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த நான்காம் தேதி முருகேசனின் மனைவி, மகன், மருமகள் உள்ளிட்டோரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த முருகேசனின் குடும்பத்தினர், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களை முருகேசன் உடனிருந்து கவனித்து வந்த நிலையில் மருத்துவமனைக்குள்ளும் புகுந்த அந்த கும்பல், முருகேசனையும், உறவினர்களையும் மீண்டும் தாக்கி மருத்துவமனையை விட்டு விரட்ட முயன்றதாக கூறப்படுகின்றது.

அடுத்தடுத்து இருமுறை நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முருகேசன் ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தாக்குதல் நடத்தியவர்களை அழைத்து விசாரிக்கவோ, கைது செய்யவோ நடவடிக்கை மேற்கொள்ளாத போலீசார் , வியாழக்கிழமை முருகேசனை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆயில்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்காதரன் என்பவர் முருகேசனை நேரடியாக வந்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். விசாரணைக்கு பின்னர் அவரே முருகேசனை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து வீட்டு அருகே இறக்கி விட்டு சென்றுள்ளார்.

எஸ்.ஐ இறக்கிவிட்ட அடுத்த நிமிடமே சொல்லி வைத்தாற் போல அங்கு மறைந்திருந்த சிலர் முருகேசனை சரமாரியாக தாக்கியதில் முருகேசன் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முருகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடல் கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அறிந்த முருகேசனின் உறவினர்கள் திரளாக சேலம் அரசு மருத்துவமனை பிணவறை அருகே திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முருகேசனை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்ற உதவி ஆய்வாளர் கங்காதரன் கொடுத்த தகவலின் பேரில் கொலையாளிகள் முருகேசனை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டி அங்கு வந்த போலீசாரை முற்றுகையிட்டனர்.

விவசாயி கொலைக்கு காரணமானவர்களை கைது செய்வதோடு, அதற்கு உடந்தையாக இருந்த எஸ்.ஐ கங்காதரனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை உயர் அதிகாரிகள் முருகேசனின் உறவினர்களை சமாதானப்படுத்தினர். முதற்கட்ட நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் கங்காதரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments