அந்த சின்ன பையனுக்கு பார்வையே போச்சுடா... பரிதாபமே இல்லாம பஞ்சாயத்தா ? ஆசிரியையின் கவனக்குறைவால் விபரீதம்
செங்கல்பட்டு அருகே அரசு பள்ளியில் ஆசிரியை முன்னிலையில் சக மாணவனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவர் கண்பார்வையை இழந்து பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒரு சிறுவனின் கண் பார்வை பறிபோயுள்ள நிலையில் சமரசம் பேசுவதாக கூறி ஆசிரியையின் ஆதரவாளர்கள் செய்த கட்டபஞ்சாயத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
செங்கல்பட்டு அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தம். இவரது மூத்த மகன் சுதாகர், வீட்டின் அருகே உள்ள சிதண்டி மண்டபம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் பள்ளியில் ஆசிரியை கரும்பலகையில் எழுதிக்கொண்டே பாடத்தை கவனித்து நோட்புக்கில் எழுதும்படி கூறிள்ளார்.
அப்போது சுதாகரிடம், அருகில் அமர்ந்திருந்த மற்றொரு மாணவன் பேனா கேட்டதால், சுதாகர் தன்னிடம் ஒரேயொரு பேனா மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார். ஆசிரியை, பலகையில் எழுதி போட்ட குறிப்புகளை எழுதாமல் சுதாகரிடம் பேசிக்கொண்டிருந்த அந்த மாணவனை அழைத்து கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் பேனா தந்தால் டீச்சர் சத்தம் போட்டிருக்க மாட்டாங்கல்ல என்று தனது முக்கோன வடிவிலான ஸ்கேளால் சுதாகரின் முகத்தை நோக்கி வீசியுள்ளார். இதில் சுதாகரின் வலது கண் கருவிழியில் பலத்த காயம் ஏற்பட்டு சிவந்து போனது.
வலியால் அழுத சுதாகரை ஆசிரியை அழைத்து முகம் கழுவி தலைமை ஆசிரியர் அறையில் படுக்க வைத்துள்ளார். எப்போதும் போல் பள்ளி முடிவடைந்த பிறகு மாலை வேறொரு சக மாணவன் சுதாகரின் கையை பிடித்து அழைத்து சென்று சுதாகரின் வீட்டில் விட்டுள்ளார். மேலும் காயமுற்ற சுதாகரிடம், உங்களுடைய வீட்டில் நடந்ததை கூற வேண்டாம் என ஆசிரியை கூறியதால் சுதாகர் பெற்றோரிடம் எதையும் கூறாமல் மறைத்துள்ளார்.
இரவு நேரத்தில் கண்ணில் வலி தாங்க முடியாமல் கதறி அழுத சுதாகர், பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்த பெற்றோர், விடியற் காலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தங்கள் மகனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
பரிசோதித்த மருத்துவர்கள், கண் கருவிழியில் பலமாக அடிபட்டுள்ளதால், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சென்னை எழும்பூர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் சுதாகருக்கு பலமாக கருவிழியில் காயம் ஏற்பட்டதால் 90 சதவீதம் கண்பார்வையை இழக்க நேரிடும் என மருத்துவர்கள் தரப்பில் கூறியதால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மாணவனின் பெற்றோர் கூறும்போது அடிபட்ட உடனே மருத்துவரை அனுகியிருந்தால் என் மகனின் கண்பார்வை பறிபோயிருக்காது. என்றும் பள்ளி ஆசிரியையின் அஜாக்கிரதை யினாலும் உண்மையை மறைத்ததினாலும் இந்தநிலை உருவாகியுள்ளது என்று குற்றஞ்சாட்டினர்.
ஆசிரியை தரப்பினர் இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் நடந்ததை மறைத்து, வேறேங்கோ நடந்தமாதிரி எழுதி கொடுங்கள் மாணவனின் சிகிச்சை முழுவதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என கூறி பஞ்சாயத்து பேசியதாக குற்றஞ்சாட்டி உள்ள நித்தியானந்தம் அது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்
தனது அஜாக்கிரதையால், ஒரு சிறுவனின் கண்பார்வை பறிபோயிருக்கும் சூழலில், தான் பார்த்து வரும் ஆசிரியர் வேலை பறிபோய்விடக்கூடாது என்பதற்காக சக ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களை அனுப்பி ஆசிரியை பஞ்சாயத்து பேசியதற்கு பதிலாக அந்த சிறுவனின் கண்பார்வையை சரி செய்ய உதவி இருக்கலாம் என்று சிறுவனின் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் தங்கள் மகனின் கண்பார்வை திரும்பக்கிடைக்க அரசு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments