399 மதிப்பெண் எடுத்த மாணவியை மருத்துவ படிப்பில் சேர நிர்பந்தித்த பெற்றோர்..! நீட் பயிற்சி விரக்தியால் ரெயிலில் பாய்ந்தார்

0 63582

நெய்வேலி ஆகாஷ் நீட் பயிற்சி மையத்தில் ஓராண்டாக படித்தும் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத விரக்தியில், பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற இயலாத ஏமாற்றத்தால் மாணவி ஒருவர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம் அரங்கேறி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 30ல் வசித்து வருபவர் உத்திராபதி. என்எல்சி ஒப்பந்த தொழிலாளியான உத்ராபதி, தனது மகள் நிஷாவை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். கடந்த ஆண்டு நெய்வேலியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ முடித்த நிஷா 399 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த நிலையில் நீட் தேர்வையும் எழுதினார் .

நீட் தேர்வில் சரியான மதிப்பெண்கள் கிடைக்காததால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. இருந்தாலும் அவரது பெற்றோர் எப்படியாவது தங்களது மகளை மருத்துவ படிப்பில் சேர்த்து விட வேண்டும் என் உறுதியாக இருந்ததாக கூறப்படுகின்றது.

நீட் தேர்வு பயிற்சிக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெய்வேலி அருகே இந்திரா நகரில் அமைந்துள்ள ஆகாஷ் நீட் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளனர். இங்கு கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வந்த நிஷா மே மாதம் ஏழாம் தேதி நீட் தேர்வு எழுதுவதற்கு தயாரானதாக கூறப்படுகின்றது.

அந்த பயிற்சி மையத்தில் எழுதப்பட்ட மாதிரி தேர்வுகளில் நிஷா சரியான மதிப்பெண்கள் பெறவில்லை என்பதால் மன உளைச்சலுக்கு ஆளான நிஷா, புதன்கிழமை வகுப்பு இல்லாத நிலையிலும் வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு நெய்வேலியில் இருந்து பேருந்து மூலம் வடலூருக்கு சென்றுள்ளார்.

வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் இறங்கி நடந்த அவர் பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி வந்த ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

ரெயில் மோதிய வேகத்தில் தூக்கிவீசப்பட்ட நிஷாவின் சடலம் தண்டவாளத்தோரம் கிடந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மாணவிக்கு மருத்துவ படிப்பில் போதிய நாட்டம் இல்லை என்றாலும் பெற்றோரின் நிர்பந்தம் காரணமாக, அவர்களது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற நெருக்கடியில் அவர் நீட் பயிற்சிக்கு சென்றதாகவும், ஒரு வருடம் வேறு எந்த படிப்பிலும் சேராமல் முழுக்க முழுக்க நீட் தேர்வுக்காக தயாரான நிலையில் தன்னால் தகுதியான மதிப்பெண்ணை எடுக்க இயலாததால் கடும் மன உளைச்சல் அடைந்து இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டது தெரியவந்தது.

பெற்றோர்களே உங்கள் நிறைவேறாத கனவுகளை நிறைவேற்ற விருப்பமில்லா குழந்தைகளை நிர்பந்தபடுத்தி நெருக்கடியில் தள்ளாதீர்கள் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments