நள்ளிரவில் அலறல்.. நிர்வாண கொடுமை உயிர் தப்ப உதவிய மூதாட்டி..! ரோந்து போலீசார் அதிரடி
சென்னையில் நகைப்பட்டறை உரிமையாளர்களை தாக்கி , நிர்வாணப்படுத்தி கட்டிப்போட்டுவிட்டு, 400கிராம் தங்க நகைகளுடன் ஊழியர்கள் தப்பியோடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிளாட்பார மூதாட்டியால் இருவர் உயிர் தப்பிய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சலாவூதின், சக்ஜத் ஆகிய இருவரும் இணைந்து சென்னை, பூங்கா டவுன் ராசாப்பா செட்டி தெருவில் கடந்த மூன்று மாதங்களாக நகைப்பட்டறை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை யானைகவுனி காவலர் பிரவீன் குமார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, நகைப்பட்டறை இயங்கி வரும் கட்டிடத்தையொட்டிய பிளாட்பாரத்தில் படுத்துகிடந்த மூதாட்டி ஒருவர் இந்த நகைப்பட்டறையில் இருந்து அடிக்கடி அலறல் சத்தம் கேட்பதாக போலீசிடம் தெரிவித்தார்
உடனடியாக காவலர் பிரவீன் குமார் கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்று கதவை தட்டியபோது, கதவு திறக்கபடாததால் சந்தேகமடைந்த காவலர் மேலும் சில காவலர்களை அழைத்துள்ளார்.
பின்னர் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது உரிமையாளர்கள் சலாவுதின் மற்றும் சக்ஜத் ஆகியோர் ஆடைகளின்றி நிர்வாணமாக படுகாயங்களுடன் கட்டிப்போட்டு இருப்பதை போலீசார் காண்டு பிடித்தனர்.
அந்த அறையில் கேஸ் சிலிண்டர் திறந்திறந்து வைக்கப்பட்டிருப்பதை கண்ட போலீசார் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்து அவர்கள் உதவியுடன் சிலிண்டரை அப்புறப்படுத்தி இருவரையும் மீட்டு அவர்களுக்கு ஆடைகள் கொடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
அவர்கள் அளித்த தகவலின் பேரில் நகைப்பட்டறையில் கொள்ளையடித்து விட்டு நகைகளுடன் தப்பிச்சென்றவர்களை ரோந்து போலீசார் விரட்டிச்சென்றனர்.
மிண்ட் தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் அருகே வைத்து ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து 400 கிராம் நகைகள் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் அவர் நகை பட்டறை ஊழியர் சுகந்தர்ராய் என்பதும், தப்பி ஓடியவன் அஜய் என்பதும் தெரியவந்தது.
இந்த இருவர் உள்ளிட்ட 4 பேர் , கடந்த சில மாதங்களாக நகைப்பட்டறையில் வேலை பார்த்து வந்ததாகவும், உரிமையாளர்கள் சம்பளம் கொடுக்காமல், தட்டிக் கழிப்பது குறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதால், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து உரிமையாளர்கள் இருவரையும் தாக்கி நிர்வாணமாக்கி கட்டிப்போட்டதாகவும், கேஸ் சிலிண்டரை திறந்துவைத்து விட்டு கடையில் இருந்த 400கிராம் தங்க நகைகளுடன் தப்பி வந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவான அஜாய்யை யானை கவுனி போலீசார் தேடி வருகின்றனர்.
பிளாட்பாரத்தில் தூங்கிய மூதாட்டி தக்க சமயத்தில் ரோந்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments