கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட நபர் கைது!
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஷாருக் சைபி என்ற நபர், மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயில் எலத்தூர் அருகே சென்றபோது, ஒரு நபர் பயணிகள் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்ததில், அச்சத்தில் 3 பேர் ரயிலில் இருந்து கீழே குதித்து பலியாகினர்.
9 பயணிகள் தீக்காயமடைந்தனர். தண்டவாளத்தில் கிடைத்த பையில் இருந்த செல்போன், டைரி உள்ளிட்டவற்றை வைத்து, அந்த நபர் நொய்டாவைச் சேர்ந்த ஷாருக் சைபி என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
இந்நிலையில், முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு, மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் சிகிச்சைப்பெற்று வந்த ஷாருக்கை கைது செய்த அம்மாநில தீவிரவாத தடுப்பு பிரிவினர், அவனை கேரள தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
தீ வைப்பு சம்பவத்திற்கு பிறகு, அதே ரயிலில் ஷாருக் கண்ணூருக்கு சென்று, அங்கிருந்து மங்களூரு வழியாக ரத்தினகிரிக்கு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments