மருமகளை கத்தியால் குத்திய கஞ்சா குடிக்கி இளைஞரை விரட்டிப் பிடித்த வீர மாமியார்..! கஞ்சாவால் இது 3-வது சம்பவம்
சேலத்தில் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த மருமகளை கத்தியால் குத்திவிட்டு, துரத்தி வந்த கஞ்சா குடிக்கி இளைஞர் மீது பொருட்களை வீசியும், தண்ணீரை ஊற்றியும், மாமியார் விரட்டி அடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை லீ பஜார் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மதன்குமார். இவரது மனைவி மைதிலி. இவர் திங்கட்கிழமை இரவு கடைக்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கஞ்சா குடிக்கி இளைஞரான தங்கராஜ் என்பவர் மைதிலியை குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்ததால் அவரை மைதிலி சத்தம் போட்டதால் அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் பின்பக்கமாக வந்த தங்கராஜ், மைதிலியின் இடுப்பில் கத்தியால் குத்தினான்.
இதனால் பதறி அடித்துக் கொண்டு மைதிலி தனது கடைக்குள் ஓடினார். தனது மருமகள் கடைக்குள் அலறியபடியே வருவதை கண்ட மைதிலியின் மாமியார், கத்தியுடன் கடைக்குள் நுழைய முயன்ற தங்கராஜ் மீது கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து வீசினார்.
அவன் போதையில் இருப்பது தெரியவந்ததால் அவன் மீது தண்ணீரை ஊற்றியதோடு வாளி மற்றும் டப்பாக்களை எடுத்தும் வீசியடித்தார்.
கடைக்குள் இருந்த கணவர் மதன்குமார் வெளியே வருவதை கண்டதும், தங்கராஜ் அங்கிருந்து தப்பி ஓட அவனை விரட்டிச்சென்று மைதிலியின் மாமியாரும், கணவரும் சேர்ந்து அவனை பிடித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .
அவன் கஞ்சா போதையில் இருந்ததால் அவனுடைய வீட்டிற்கு தகவல் கொடுத்த போலீசார், அவனை காலையில் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு கூறி அனுப்பி வைத்த கூத்தும் அரங்கேறியது.
கத்திக்குத்து சிசிடிவி காட்சி வைரலானதை அடுத்து பள்ளப்பட்டி காவல் துறையினர் வேறு வழியின்றி வழக்கு பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். கஞ்சா போதைக்கு அடிமையான தங்கராஜ் ஏற்கனவே தன்னை சத்தம் போட்ட இருவரை இதே போல கத்தியால் குத்தியதாக கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.
கஞ்சா போதையில் அட்டகாசம் செய்யும் ஆசாமிகளுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற விபரீத கத்திக் குத்து சம்பவங்களை தடுக்க இயலும் என்பதே கசப்பான உண்மை.
Comments