தோழி வீட்டில் கோழி போல பதுங்கிய நடன ஆசிரியர்.. தட்டித் தூக்கிய போலீஸ்..! கலகலக்கும் கலாஷேத்ரா

0 3254

கலாஷேத்ரா நுண்கலைக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடன ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தோழி வீட்டில் பதுங்கியவர் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னை கலாஷேத்ரா நுண்கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடன ஆசிரியர் ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதுநிலைப் படிப்பின் போது ஹரிபத்மன் பாலியல் ரீதியாகவும், தவறான நோக்கத்தில் தன்னிடம் தொடர்ச்சியாக தவறாக நடந்து கொண்டதாகவும், தொந்தரவு காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டுச் சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கலை நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றிருந்ததாக கூறப்பட்ட ஹரிபத்மன் தலைமறைவானார்.

அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனதால் போலீசார் டவரை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்று, பாதிக்கப்பட்ட மாணவியுடன் படித்த மூன்று சக தோழிகளிடம் விசாரணை நடத்தி விவரங்களைப் பெற்றனர்.

ஹைதராபாத்துக்கு கலை நிகழ்ச்சிக்குச் சென்ற ஹரிபத்மன் ஞாயிறு இரவு சென்னை திரும்பியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது செல்போனில் இருந்து கடைசியாக மாதவரத்தில் உள்ள அவரது தோழியுடன் பேசியிருப்பது தெரியவந்ததையடுத்து, திங்கட்கிழமை அதிகாலை மாதவரத்தில் உள்ள அந்த பெண் தோழி வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், போலீசார் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்து முதல் தளத்தில் பதுங்கி இருந்த நடன ஆசிரியர் ஹரிபத்மனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஹரிபத்மனிடம் எம்ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் வைத்து சுமார் 10 மணி நேரமாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, புகார் கூறிய மாணவிகள் அனைவருடனும் சகஜமாக மட்டுமே பேசி வந்ததாகவும், தன் மீது புகார் கூறிய முன்னாள் மாணவி வேறு காரணத்திற்காக கல்லூரியை விட்டு வெளியேறியதாகவும், தன் மீது கூறும் குற்றச்சாட்டு உண்மையல்ல எனவும் மறுத்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர் ஹரிபத்மனை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சுப்பிரமணியன் வருகிற 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஹரிபத்மன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதே போல எத்தனை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார், எத்தனை மாணவிகளிடம் ஆபாசமாக பேசியுள்ளார், வேறு ஏதும் விவரங்கள் எடுத்து வைத்துள்ளாரா ? எனக் கண்டறிய போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். செல்போன் தகவல்கள் ஏதேனும் அழிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் போலீஸ் காவலில் எடுத்து ஹரிபத்மனை விசாரணை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments